தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு அருகேயுள்ள சோழகன்கரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கருணாநிதி.  இவரது மகன் அருண் செல்வா (27), எம்எஸ்சி பிஎட் படித்துள்ள இவர், விவசாயம் செய்து வருகிறார். அருண்செல்வா,

  பாப்பாநாடு பகுதியிலுள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளையில் கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் செப்டம்பர் 25 ஆம் தேதி  மாலை வீட்டில் ஒய்வாக அமர்ந்து, அருண்செல்வா டிவியில் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மாலை 3.21 மணிக்கு அவரது வங்கி சேமிப்பு கணக்கிலிருந்து 9.44 எடுக்கப்பட்டுள்ளதாக அவரது மொபைலுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து, மேலும் 10,000 மற்றும் 5,000 எடுக்கப்பட்டுள்ளதாக அடுத்தடுத்து தொடர்ந்து மெசேஜ் வந்தது. இந்த அதிர்ச்சியிலிருந்து அவர் மீள்வதற்குள் 3.32 மணிக்கு ஒரே பரிவர்த்தனையில் மேலும் 49,780 எடுக்கப்பட்டுள்ளதாக மெசேஜ் வந்தது. அதோடு 3.37 மணிக்கு மேலும் 500 எடுக்க முயற்சி செய்து அன்றைய தினத்திற்கான பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு அளவுக்கு ஏற்கெனவே பணம் எடுக்கப்பட்டுவிட்டதால் அந்த பரிவர்த்தனை நிராகரிக்க பட்டுவிட்டதாக ஒரு மெசேஜ் வந்தது. இந்த மெசேஜ்களை படித்தவுடன் பதற்றமான அருண்செல்வா, செய்வதறியாமல் முழித்துபடி பதற்றமானார்.



அன்றைய தினம் சனிக்கிழமை, வங்கிக்கு விடுமுறை என்பதால், உடனே, பாப்பாநாடு காவல் நிலையத்துக்குச் சென்று இதுபற்றி புகார் செய்தார். ஆனால், காவல் நிலையத்திலிருந்த போலீசார், தஞ்சாவூர் எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளிக்குமாறு கூறி அங்கிருந்த புகாரை வாங்க மறுத்துவிட்டனர். அப்போது அங்கிருந்த போலீசார் ஒருவர்,  தனது மொபைல் ஃபோனில் சைபர் க்ரைம் போலீஸாரை தொடர்பு கொண்டு அதை அருண் செல்வாவிடம் போனை கொடுத்தார். மறுமுனையில் பேசிய நபர் ரிப்ரன்ஸ் நம்பரை அனுப்புமாறு கூறியள்ளார். ஆனால், அந்த நம்பர் இல்லை என செல்வா கூறியவுடன், அந்த எண் இருந்தால்தான் வங்கிக் கணக்கில் மீதமுள்ள பணம் திருடுபோகாமல் ஃப்ரீஜ் பண்ண முடியும் எனக்கூறி இணைப்பை போலீசார் துண்டித்து விட்டார். அதன் பின்னர், அருண் செல்வா, தனது  வங்கி கணக்கில் மீதமிருந்த பணத்தை தனது நண்பரின் வங்கிக் கணக்கிற்கு ட்ரான்ஸ்ஃபர் செய்து, வங்கியின் கஸ்டமர் கேர்-ஐ தொடர்பு கொண்டு புகார் தெரிவித்து தனது ஏடிஎம் கார்டை பிளாக் செய்தார். அதனை தொடர்ந்து, தஞ்சாவூர் எஸ்.பி. அலுவலகத்தில் இயங்கிவரும் சைபர் க்ரைம் அலுவலகத்திற்குச் சென்று நடந்த விபரங்களைக் கூறி, ஆன்லைனில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் சைபர் க்ரைம் போலீஸார் அவருக்கு மனு ரசீது அளித்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




அதன் பிறகு,  அருண்செல்வா, பாப்பாநாடு கிராமத்தில் இயங்கிவரும் வங்கிக் கிளைக்குச் சென்று இச்சம்பவம் குறித்து அங்கிருந்த மேனேஜரிடம் தெரிவித்துள்ளார்.   ஆனால் அங்குள்ள அதிகாரிக்கு, தமிழ் தெரியவில்லை. இந்தி அல்லது ஆங்கிலம் மட்டுமே தெரிந்திருந்தால், அங்கிருந்த வங்கி ஊழியர் ஒருவரின் உதவியுடன், தனது வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டுள்ளது என வங்கி அதிகாரியிடம் விளக்கினார். அவரது வங்கிக் கணக்கை ஆய்வு செய்த வங்கி அதிகாரிகள், மாலை 3.21 மணிக்கு எடுக்கப்பட்ட தொகை 9.44 மட்டும் பராமிரப்புச் செலவுக்கென வங்கி நிர்வாகத்தால் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.


அதே நேரத்தில்  அதாவது 3.21 மணிக்கு 10,000 மற்றும் 3.22 மணிக்கு 5,000 என அடுத்தடுத்து இரண்டு பரிவர்த்தனைகளில் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, 3.32 மணிக்கு ஏடிஎம் கார்டை ஸ்வைப் செய்து 49,780 எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கும் வங்கிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அருண்செல்வா கூறுகையில், விவசாயம் செய்து கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை, வீட்டில் வைத்திருந்தால் திருட்டு போய்விடும், வங்கியில் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையிலேயே என்னை போன்ற ஏழை, எளிய மக்கள், விவசாயிகள் வியர்வை சிந்தி உழைத்து பணத்தை எதிர்கால தேவைக்காக வங்கி சேமிப்பு கணக்கில் போடுகிறோம். வங்கியில் போடும் பணத்திற்கும் பாதுகாப்பு இல்லை என்றால் அதற்கு யார் பொறுப்பு ஏற்பது.




வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிலிருந்து திடீரென மர்ம நபர்களால் பணம் திருடப்பட்டால் அது குறித்து சைபர் க்ரைம் போலீஸில் என்ற 155260 என்ற கட்டணமில்லா ஹெல்ப் லைன் எண்ணை 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால் மோசடி நபர்களின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்ட பணத்தை அவர்கள் எடுக்க முடியாதவாறு ஃப்ரீஜ் செய்யப்படும். ஆனால், வங்கி நிர்வாகத்தினர் என்ன காரணத்தினாலோ இதுபோன்ற முக்கிய தகவலை தங்களது வங்கிகளின் அறிவிப்பு பலகையில் அறிவித்து வாடிக்கையாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் உள்ளது வேதனையான செயலாகும் என்றார். போலீசார் பணம் எடுத்தது குறித்து ஆய்வு செய்த போது,  கடைசி பரிவர்த்தனையாக 500 எடுக்க முயற்சித்து அப்பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டதாக வந்த மெசேஜில் எஸ்.எஸ். டிரேடர்ஸ், கொல்கத்தா என உள்ளது. எனவே அருண் செல்வாவின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை திருடியவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்ககூடும் என கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.