தமிழக-கேரளா எல்லை பகுதியான தென்காசி மாவட்டம் புளியரை வாகன சோதனை சாவடி வழியாக ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனை கண்காணிக்கும் காவல்துறையினர் அவ்வப்போது சோதனை சாவடியில் ரேசன் பொருட்களை பறிமுதல் செய்து தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி நேற்று இரவு ரேசன் அரிசி கடத்தல் நடைபெற இருப்பதாக புளியறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், புளியரை சார்பு ஆய்வாளர் தலைமையிலான போலீசார் புளியரை சோதனை சாவடியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தமிழகத்தில் இருந்து கேரளா நோக்கி சென்ற அனைத்து வாகனங்களையும் போலீசார் முழுமையாக சோதனைக்கு உட்படுத்திய போது, கோவில்பட்டியில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் நோக்கி சென்ற ஒரு லாரியை மறித்து போலீசார் சோதனை செய்துள்ளனர்.
அப்போது, லாரி ஓட்டுநர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியில் இருப்பது என்னவென்று விசாரணை மேற்கொண்ட போது, தூத்துக்குடியில் விளைந்த உப்பு மூட்டைகளை கேரளா நோக்கி கொண்டு செல்வதாக லாரி ஓட்டுநர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவரது பதிலில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் லாரியில் மூடப்பட்டிருந்த தார்பாயை அகற்றி உள்ளே இருந்த மூட்டைகளை சோதனை செய்துள்ளனர். அப்பொழுது மேற்பகுதியில் உப்பு மூட்டைகளும், அடிப்பகுதியில் அரிசி மூட்டைகளும் இருந்ததுள்ளது. அதனை தொடர்ந்து, லாரியில் இருந்த அரிசி முட்டைகளை சோதனை செய்த போது அது ரேஷன் அரிசி என்பது தெரிய வந்துள்ளது, அதில் 12 டன் ரேசன் அரிசி மூட்டைகளில் இருந்ததையடுத்து அதனை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட கேரளா மாநிலத்தை சேர்ந்த பீர்க்கண்ணு மற்றும் சாகுல் ஹமீது ஆகிய இருவரை கைது செய்து தொடர்விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புளியரை போலீசார் தகவல் கொடுத்துள்ள நிலையில், இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? தொடர்ச்சியாக இது போன்று இவர்கள் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனரா? எங்கிருந்து ரேசன் அரிசி கொண்டுவரப்பட்டது. இதனை யாரிடம் விற்பனை செய்ய உள்ளனர் என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். உப்புமூட்டைக்குள் ரேசன் அரிசியை பதுக்கி கேரளாவிற்கு கடத்தி செல்லவிருந்த இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.