ஒடிசா  மாநிலத்தை சேர்ந்தவர் அஜய்குமார் மாண்டல் (25). இவரது மனைவி வந்தனா மஜ்கி. இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் குழந்தை இல்லை. மேலும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவி இருவரும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வேலாயுதபுரத்திற்கு வந்து அங்கு வசித்து வருகின்றனர். மேலும் இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார்.   இந்நிலையில் நேற்று காலை பணிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய போது மனைவி வந்தனா மஜ்கி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்துள்ளார்.


இதனை கண்ட அஜய்குமார் அதிர்ச்சி அடைந்ததோடு மனைவியின் நிலையை கண்டு கதறி அழுதார். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வந்தனா மஜ்கியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.


அதில் கணவன், மனைவி இருவரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் தன் தவறை உணர்ந்த அஜய்குமார் மண்டல் ஒரு கட்டத்தில் அந்த பழக்கத்தில் இருந்து வெளிவந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் வந்தனா மஜ்கி மீண்டும் மீண்டும் ரம்மி விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் வந்தனா மஜ்கி ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ரூபாய் 70 ஆயிரம் பறிகொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த கணவர் அஜய்குமார் மண்டல் மனைவி வந்தனாவை கண்டித்துள்ளார். மேலும் பணத்தை இழந்த வந்தனா மஜ்கி இதில் விரக்தி அடைந்த நிலையில் இருந்துள்ளார். இந்த சூழலில் நேற்று வீட்டில் தனியாக  இருந்த நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் அவரது செல்போனை காவல்துறையினர் ஆய்வு செய்த போது அதில் அவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்பவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகுந்த வேதனைக்குரியதாகும். இந்த சூழலில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.


மாநில உதவிமையம் : 104


சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண