தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள மாறாந்தை வடக்குக் காலனித் தெருவைச் சேர்ந்தவர் ராமையா. இவரது மகன் பேச்சிக்குட்டி(23). இவர் வெளியூரில் தங்கி லாரி ஓட்டும்  தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவரது சகோதரர் திருமணத்திற்காக தற்போது ஊருக்கு வந்திருந்தார். அப்போது நேற்று இரவு தனது வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் பேச்சிக்குட்டி, அவரது நண்பர்கள் முருகேசன், இசக்கிமுத்து, கனி செல்வன் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது.


அதனை பக்கத்து வீட்டைச் சேர்ந்த சண்முகையா என்பவரது மகன் சுரேஷ் தட்டிக் கேட்டதாக தெரிகிறது. அப்போது குடிபோதையில் சுரேஷின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சுரேஷ் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை அறிந்த சுரேஷின் தந்தை சண்முகையா என்பவர் பேச்சுக்குட்டி வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு அனுப்பி வைத்துள்ளனர்.


இந்நிலையில் இரவு சுமார் 11.30 மணி அளவில் பேச்சுக்குட்டி தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி, கம்பு போன்ற ஆயுதங்களுடன் வந்து பேச்சிக்குட்டியை மறித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். பின் அதில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பேச்சிக்குட்டியின் விலாவில் குத்தியுள்ளார். இதில் பேச்சிக்குட்டி குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.  இது குறித்து ஆலங்குளம் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.


தொடர்ந்து உயிரிழந்த பேச்சிக்குட்டியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக  நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிந்து கொலை செய்த குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆலங்குளம் அருகே மாறாந்தையில்  வீட்டின் அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்ட வாலிபரை தாக்கியதற்காக அவரது உறவினர்கள் பதிலுக்கு மது அருந்தி தகராறு செய்த ஒருவரை குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.