தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன்-தமிழ்ச்செல்வி தம்பதியியினர். இவர்களது மகன் ராஜேஷ் (வயது 24). தாய் தமிழ்செல்வி தற்போது திமுக மாவட்ட பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். மேலும் ராஜேஷ் செங்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வேலை பார்த்து வரும் நபர்களை ஒருங்கிணைத்து மேற்பார்வை செய்யும் பணி செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ராஜேஷ் தனது சகோதரியை அழைத்துக் கொண்டு செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் உள்ள சுகாதார மையத்தில் விட்டு விட்டு நகராட்சி அலுவலக வளாகத்தில் தனது இருசக்கர வாகனத்தில் ஓரமாக நின்றுள்ளார். அப்போது அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் ராஜேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர். இது குறித்து செங்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இருசக்கர வாகனத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த  நிலையில் இருந்த ராஜேஷின் உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


இந்த நிலையில், ராஜேஷின் உறவினர்கள் சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்து செங்கோட்டை நகராட்சி அலுவலகத்திற்கு முன்பு உள்ள திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தினர். இதனால் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் குற்றவாளிகளை கைது செய்ய இரண்டு தனிப்படையினர் நெல்லை மற்றும் அம்பை பகுதிக்கு விரைந்தனர். அப்போது  நாங்கு நேரியை சேர்ந்த மாரி மற்றும் விளாகம் பகுதியை சேர்ந்த மந்திரமூர்த்தி ஆகிய இருவர் அம்பை நீதிமன்றத்தில் சரணடைய சென்ற நிலையில் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். 




தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜேஷிற்கும், செங்கோட்டை ரயில் நிலையத்தில் டீ விற்பனை செய்து வந்த நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாரி, மந்திரமூர்த்தி ஆகிய இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்பொழுது ராஜேஷ் மற்றும் அவருடன் வந்த நண்பர்கள் சேர்ந்து தாக்கியதில் மந்திரமூர்த்தி படுகாயம் அடைந்துள்ளார். ஆனால் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் எதுவும் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் ஆற்றில் குளிக்க சென்ற போதும் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் ராஜேஷை திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனிடையே ராஜேஷை கொலை செய்து விட்டு அரிவாளோடு வந்த இருவர் இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகராட்சி அலுவலக வளாகத்தில் ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண