தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், தமிழ்நாடு அரசு பற்றியும் யூ டியூபில் பரபரப்பான தகவல்களையும், குற்றச்சாட்டையும் கூறி வருபவர் சவுக்கு சங்கர். இவர் யூ டியூப் ஒன்றில் தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.


உடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் அலுவலகம் பூட்டு:


மேலும், அவர் கைது செய்யப்பட்டபோது அவரது காரில் இருந்து கஞ்சாவும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, சவுக்கு சங்கர், அவரது கார் ஓட்டுனர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக, தேனியில் உள்ள பழனிசெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த நிலையில், கஞ்சா வழக்கு தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்காக தேனி போலீசார் சென்னையில் உள்ள சவுக்கு சங்கர் அலுவலகத்திற்கு வந்தனர். சென்னை, தி.நகரில் உள்ள ராஜா பாதர் தெருவில் சவுக்கு சங்கரின் அலுவலகம் அமைந்துள்ளது. அங்கு பழனிசெட்டிப்பட்டி  காவல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் போலீசார் சென்றனர். அப்போது அலுவலகம் பூட்டப்பட்டிருந்த காரணத்தால், பூட்டை உடைத்து போலீசார் உள்ளே நுழைந்தனர். சவுக்கு சங்கர் அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் ஏதும் கிடைத்ததா? என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.


கஞ்சா வழக்கு:


சவுக்கு சங்கர் அலுவலகத்தில் இருந்து கஞ்சா உள்பட வேறு ஏதேனும் பொருட்கள் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. மேலும், சவுக்கு சங்கருக்கு கஞ்சா விநியோகம் செய்ததாக கூறி ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் கைது செய்ய்பட்டார். தற்போது, சவுக்கு சங்கர் கோவையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.


கோவை குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் அளித்த புகாரின்பேரில் சவுக்கு சங்கரை கைது செய்துள்ள கோவை போலீசார், அவர் மீது தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு உள்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர கஞ்சா வைத்திருந்ததாக தேனி போலீசாரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


நீதிமன்ற காவலில் சவுக்கு:


நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டபோது, சவுக்கு சங்கர் முதலமைச்சர் குடும்பம் கொள்ளையடிப்பதற்கு தான் தடையாக இருப்பதன் காரணமாகவே, தன் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோஷம் எழுப்பினார். தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரை, தேனியில் இருந்து கோவைக்கு அழைத்து வரும்போது போலீஸ் வேன் விபத்திற்குள்ளாகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.


தமிழக அரசு மீதும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சரவையினர் மீது தொடர் குற்றச்சாட்டுக்களை கூறி வந்த சவுக்கு சங்கரின் கைது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது கைதுக்கு சசிகலா உள்ளிட்ட சில தலைவர்கள் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க: TVK Vijay:இந்த முறை யாருக்கு என்ன சர்ஃப்ரைஸ்! விஜய் கொடுத்த அப்டேட்! ரெடியாகுங்க மாணவர்களே!


மேலும் படிக்க: TN 10th Result 2024 Topper: 500க்கு ஜஸ்ட் மிஸ்! 499 மதிப்’பெண்கள்’ எடுத்து சாதனை படைத்த ‘காவியங்கள்’ - யார் இவர்கள்?