தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் மனோஜ் என்பவருக்கு சொந்தமான இரும்புக்கடையில் கடந்த 11ந்தேதி ஒரு மர்மகும்பல் ஒன்று கடையின் மேற்கூரையை பிரித்து ரூ.4லட்சம், 2டன் கம்பிகளை திருடி சென்றது. கடையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து மேற்கு காவல் நிலைய போலீசார் மர்ம நபர்களை தேடி வந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக புதுக்கோட்டையை சேர்ந்த முருகேசன், நல்லதம்பி, ராஜா, சரவணன் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இவ்வழக்கு தொடர்பாக 2பேரை தேடி வருகின்றனர். 



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த குமாரசாமி மகன் மனோஜ் (31). இவரும், இவரது நண்பர் கணேஷ்குமாரும் சேர்ந்து கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே இரும்பு கம்பி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றனர். கடந்த 10ம்தேதி சனிக்கிழமை இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றனர். மறுநாள் கடைக்கு வந்த மனோஜ், பணம் வைத்திருந்த பேக்கை எடுத்து பார்த்த போது, அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து கடைக்குள் சென்று பார்த்த போது சுமார் 2 டன் இரும்பு கம்பி காணாமல் போய் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்தனர்.




இதில், முகமூடி அணிந்த மர்மநபர்கள் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி இரும்பு கம்பிகளை திருடி லாரியில் ஏற்றுவதும், பேக்கில் இருந்த பணத்தினை எடுத்துச் செல்வதும் பதிவாகி இருந்தது.கொள்ளையர்களை பிடிக்க எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்பேரில் டிஎஸ்பி உதயசூரியன் தலைமையில் மேற்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சபாபதி எஸ்ஐக்கள் மாதவராஜ், நாராயணசாமி, ஏட்டுகள் முருகன்,ஸ்ரீராம் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இதற்கு இடையில் நேற்று இரவு கோவில்பட்டி பழைய பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டு இருந்த 4 பேரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டையைச் சேர்ந்த முருகேசன் (43), நல்லதம்பி (30), ராஜா (30), சரவணன் (30) என்பதும், கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் அருகேயுள்ள மனோஜ்க்கு சொந்தமான இரும்பு கடையில் இந்த மாதம் 10ந்தேதி 4 லட்சம் ரூபாய் பணம் மற்று 2 டன் இரும்பு கம்பியை கொள்ளையடித்து சென்றதையும், கடந்த மாதம் 10ந்தேதி (10.06.2021) கயத்தாரில் முருகன் என்பவருக்கு சொந்தமான இரும்புக்கடையில் ரூ 1லட்சம் மதிப்புள்ள இரும்புக் கம்பிகளை திருடியதையும் ஒப்புக்கொண்டனர். மேலும் இந்த கும்பலில் தொடர்புடைய 2 பேர் கேரளா மாநிலத்தில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையெடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ 2லட்சத்து 25ஆயிரத்தையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை கைது செய்ய தனிப்படை போலீசார் கேரளாவிற்கு சென்றுள்ளனர்.

 

இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கைதான முருகேசன் தலைமையில் இந்த கும்பல் தமிழகம் முழுவதும் இரும்பு கம்பிகள் திருடுவதை தொழிலாக கொண்டுள்ளனர். இதில் முருகேசன் மீது மட்டும் தமிழகம் முழுவதும் இரும்பு கம்பிகளை திருடியதாக 30 வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்க்கொள்ளும் இந்த கும்பல் சாலையின் ஓரத்தில் போக்குவரத்திற்கு வசதியாக இருக்கும் இடங்களில் உள்ள இரும்புக் கடைகளை நோட்டமிடுவது, எப்படி திருடுவது என்று திட்டமிட்டு, அமாவாசை தினத்தில் தான் தங்களது திருட்டினை அரங்கேற்றம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

 

இந்த அமாவாசை திருடர்கள் இரும்பு கடைகளில் அமாவாசையன்று கொள்ளையடிப்பது வழக்கமாக கொண்டு உள்ளனர். கோவில்பட்டி கொள்ளை சம்பவத்தின் போது கேரளத்தை சேர்ந்த அஷ்ரப் என்பவர், கடையில் உள்ள கல்லாவை உடைத்து ரூ 4 இலட்சம் கொள்ளையடித்துள்ளார். பெரும்பாலும் இந்த அமாவாசை திருடர்கள் கொள்ளையடிக்கும் போது மொத்த கடையையும் காலி செய்வதில்லை, குறிப்பாக புறவழி சாலை கடைகள் 2 அல்லது மூன்று டன் இரும்புகளை கொள்ளையடிப்பதை வழக்கமாகி கொண்டு உள்ளனர். இவ்வாறு செய்வது கடைகாரர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்பதால் இப்படி கொள்ளையில் ஈடுபடுவது வழக்கம்.



ஆனால் இச்சம்பவத்தில் பணம் கொள்ளை போனதை தொடர்ந்தே உரிமையாளர் புகார் அளிக்க அதன்பேரில் சிசிடிவி கேமரா பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது டாடா ஏஸ் வாகனத்தில் இரும்பு கம்பிகளை கொள்ளயடித்து சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சாத்தூர் டோல்கேட்டில் வாகனம் கடந்து சென்றுள்ளதை அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பார்த்துள்ளனர். இதனை தொடர்ந்து வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டு விசாரித்தபோது புதுக்கோட்டை முருகேசனுக்கு சொந்தமானது என தெரியவந்து உள்ளது. இதனடிப்படையில் காவல்துறையினர் குற்றவாளிகளை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பணத்தையும் இரும்பையும் கொள்ளையடுத்தது தெரியவந்து உள்ளது. இது தொடர்பாக நால்வரை கைது செய்த காவல்துறையினர் தப்பியோடிய அஷ்ரப் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.