சென்னை தலைமை செயலகத்தில் இன்று சமூக வலைதளங்களில் மிகவும் ஆபாசமாக வீடியோக்கள் பதிவிடும் ஜி.பி.முத்து, திருச்சி சாதனா, ரவுடி பேபி சூர்யா, திவ்யா உள்ளிட்ட எட்டு பேர் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என தமிழ் மக்கள் அதிகார இயக்கம் சார்பில் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.
பின்னர் இது குறித்து செய்தியாளரிடம் பேசிய அதன் தலைவர் கார்த்திகேயன், அண்மை காலமாக சமூக வலைதளங்களில் மிகவும் ஆபாசமாக வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். தற்போது கொரோனா காலகட்டத்தில் படிப்பதற்காக பள்ளி மாணவ, மாணவிகள் ஆன்லைன் வகுப்புக்காக கைப்பேசிகளை பயன்படுத்தி வருகின்றனர். அப்போது ஆபாச வீடியோக்கள் பார்ப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்றும் இதனால் இன்றைய எதிர்கால இளைஞர்கள் இளம் பெண்கள், மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பாலியல் ரீதியாக, சமூகத்தில் சீர்கேடாக செயல்படுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும் என்றும் குற்றம்சாட்டினார். குறிப்பாக சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசி வரும், ஜி.பி. முத்து, திருச்சி சாதனா, ரவுடி பேபி சூர்யா, திவ்யாகல்லச்சி, சுகந்தி, DJP என்ற பெண், சேலம் மணி, சிக்கந்தர் உள்ளிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்ததாக தெரிவித்தார்.