இந்தியாவில் பப்ஜி என்ற ஆன்லைனில் விளையாடும் ஆட்டம் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பப்ஜி விளையாட்டை கைதேர்ந்தவராக திகழ்ந்த மதன், இந்த விளையாட்டை மற்றவர்களுக்கும் கொடுப்பதற்காக டாக்சிக் மதன் என்ற சேனலை யூடியூப்பில் தொடங்கி நடத்தி வந்துள்ளார்.
தொடக்கத்தில் விளையாட்டை மட்டும் சொல்லிக்கொடுத்த மதன், பின்னர் தன்னுடன் விளையாடும் பெண்கள், சிறுமிகளுடன் மிகவும் ஆபாசமாக பேசத் தொடங்கியுள்ளார். குறிப்பாக, பெண்களை மிகவும் இழிவாகப் பேசுவதை தொடர்ந்து கொண்டிருந்தார். யூடியூப்பில் அதிக சந்தாதார்களை பெற்றதால் மதனுக்கு மாதம் ரூபாய் 10 லட்சம் வரை வருமானம் வரத்தொடங்கியுள்ளது.
அவரது பேச்சினால் சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள் சீரழிவதை கண்ட சமூக ஆர்வலர்கள் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால், மதன் அவர்களது அறிவுரைகளுக்கு ஆணவத்துடன் பதிலளித்ததுடன், அவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். மதனின் யூடியூப்பில் சிறுமிகளிடம் மதன் பாலியல் ரீதியாக அத்துமீறுவது அதிகரித்ததை அடுத்து பலரும் அவர் மீது சைபர் கிரைமில் புகார் அளித்தனர். ஆன்லைனில் மட்டும் 120க்கும் மேற்பட்ட புகார்கள் மதன்மீது குவிந்த காரணத்தால் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
யூ டியூப் சேனல் அவர் மனைவி கிருத்திகா பெயரில் இருந்ததால் அவரையும் போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மதனிடம் இருந்து சொகுசு கார், செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். தருமபுரியில் இருந்து மதன் நேற்று இரவு சென்னை அழைத்து வரப்பட்டார்.
பின்னர், அவரை இன்று சென்னை சைதாப்பேட்டையில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் மதனை ஆஜர்படுத்தினர். அப்போது, நீதிபதி பரமசிவம் அவரை வரும் ஜூலை 3-ந் தேதி வரை பூந்தமல்லி கிளைச்சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
முன்னதாக, மதன் மீது குவிந்த புகார்களின் அடிப்படையில் அவரை புளியந்தோப்பு காவல்நிலையத்தில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், அவர் ஆஜராகாமால் தலைமறைவானார். பின்னர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தினமும் ஒவ்வொரு ஊருக்கு சென்று தலைமறைவாக இருந்தார். அவரை போலீசார் சென்னை, சேலம் என பல பகுதிகளிலும் தேடினர். இறுதியில் தருமபுரியில் கைது செய்யப்பட்ட மதன், தனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் கோரியிருந்தார். ஆனால், மதனின் ஆபாச பேச்சுக்களை சகிக்க முடியாத நீதிபதி, அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
மதன் தனது யூடியூப் மூலம் கிடைத்த வருமானம் மூலம் வங்கிக்கணக்கில் ரூபாய் 4 கோடி வரை இருப்பு வைத்திருந்ததும், மேலும் தனது வருமானத்தை பிட்காயின் உள்பட பலவற்றில் முதலீடு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட மதனுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று சமூகவலைதளங்களில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.