தமிழகத்தில் பல்வேறு நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு நகைக்கடன் உள்பட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அவற்றில் எச்.டி.பி. நிதி நிறுவனமும் குறிப்பிடத்தக்க நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்திற்கு சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிளைகள் உண்டு. புதுக்கோட்டையிலும் கடந்த 7 ஆண்டுகளாக எச்.டி.பி. நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.


இந்த நிதி நிறுவனத்தில் ஆண்டு தணிக்கை சமீபத்தில் நடைபெற்றுள்ளது. அப்போது, வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த ரூ.91 லட்சத்து 68 ஆயிரத்து 750 ரூபாய் மதிப்பிலான 305.625 சவரன் தங்க நகைகளை இருப்பில் இல்லாமல் இருப்பதை கண்ட தணிக்கையாளர்களும், நிதி நிறுவன அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.


இதையடுத்து, அந்த நிதி நிறுவனத்தின் உயரதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அதே நிறுவனத்தில் பணியாற்றும் சோலை மணி,37, முத்துக்குமார்,27 மற்றும் உமாசங்கர்,43 ஆகிய மூன்று பேரும் இந்த நகைகளை திருடியது அம்பலமாகியது.




இதையடுத்து, உடனடியாக தங்களது நிறுவனத்துக்கு சொந்தமான சுமார் ஒரு கோடி மதிப்பிலான நகைகளை திருடி கையாடல் செய்ததாக, அந்த நிறுவனத்தின் திருச்சி மண்டல மேலாளர் ராஜேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில், தங்க நகை கடன் பிரிவில் பணியாற்றும் சோலைமணி, தனிநபர் கடன் பிரிவில் பணியாற்றும் முத்துக்குமார், கிளை மேலாளர் உமாசங்கர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், மூவரும் இணைந்து கையாடல் செய்த நகைகளை புதுக்கோட்டை பழனியப்பா கார்னரில் உள்ள இன்டல்மணி என்ற மற்றொரு  தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர் மாரிமுத்து மற்றும் பெண் ஊழியர் ஒருவர் உதவியுடன் அதே நிறுவனத்தில் கடந்த 2019 டிசம்பர் மாதம் முதல் அடகு வைத்து இருப்பது தெரியவந்தது.


மேலும், ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் தணிக்கைக்கு வரும்போது, முன்கூட்டியே தகவல் தெரிந்தால் அடகு வைக்கப்பட்ட நிதி நிறுவனத்திலிருந்து அந்த சமயம் மட்டும் நகைகளை வாங்கி வந்து ஆடிட்டிங் வருபவர்களிடம் கணக்கு காட்டி வந்ததும் தெரியவந்துள்ளது. தற்போது, அதிகாரிகள் திடீரென ஆடிட்டிங் வந்ததால் நகை கையாடல் செய்தது தெரிந்துவிட்டதாகவும் விசாரணையில் அவர்கள் மூவரும் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய இண்டல்மணி நிதி நிறுவன மேலாளர் மாரிமுத்துவையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு உடந்தையாக இருந்த பெண் ஊழியரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ஒரு நிறுவனத்தில் அடகு வைத்த நகைகளை அதே நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் திருடி, மற்றொரு நிறுவனத்தில் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் அறிந்த அந்த நிறுவன வாடிக்கையாளர்கள் எச்.டி.பி. நிறுவனத்தின் முன்பு குவியத் தொடங்கினர். இண்டல்நிதி நிறுவனத்தில் அடகுவைத்த 305 சவரன் நகைகளையும் போலீசார் மீட்டு வருகின்றனர்.