தமிழ்நாடு பொதுத்துறையில் சில முக்கிய ஆவணங்கள் மீது சைபர் க்ரைம் அட்டாக் நிகழ்ந்துள்ளது. ரான்சம்வேர் என்னும் நூதன சாஃப்ட்வேர் கொண்டு ஆவணங்களை அபகரித்துள்ள முன்பின் அறியாத நபர்கள் சிலர் அதனை விடுவிப்பதற்காகப் பொதுத்துறையிடம் 1950 அமெரிக்க டாலர்களை பிட்காயின்களாகச் செலுத்துமாறு கேட்டு மிரட்டி வருகின்றனர்.  


வி.ஐ.பி. வருகைகள், மாநில  வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்ட ஆவணங்களை ரென்சம்வேர் மூலம் அபகரித்துள்ள நபர்கள் தாங்கள் கேட்ட பணம் கொடுக்கப்பட்டால் மட்டுமே அந்த ஆவணங்கள் விடுவிக்கப்படும் என மிரட்டல் விடுத்துவருகின்றனர். ஆவணங்கள் திருடப்பட்ட உடனேயே பொதுத்துறையின் அனைத்து கணினிகளிலும் கேட்ட பணத்தைக் கொடுக்கும்படி ஒரே நேரத்தில் மிரட்டல் செய்தி ஸ்க்ரீனில் தோன்றியுள்ளது. 1950 அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான கிரிப்டோ கரன்சி என்பது இந்திய மதிப்பில்  1லட்சத்து  47 ஆயிரத்து 175 ரூபாய்.  


இந்த ஆவணங்களை மீட்பதற்கு ஒருபக்கம் தமிழ்நாடு அரசின் கணினி பேரிடர்கால செயற்பாட்டுக் குழுவும் மேம்படுத்தப்பட்ட கணினி செயல்பாட்டு மையத்தின் குழுவினரும் (C-DAC) இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.  




தாக்குதல் எப்படி நிகழ்ந்துள்ளது?


தாக்குதலுக்குட்பட்ட பொதுத்துறையின் 12 டெஸ்க்டாப் கணினிகளில் 8ல் விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டமிலேயே செயல்பட்டு வந்துள்ளது. மேலும் இவை அனைத்துமே காலாவதியான நிலையில் இயங்குவந்ததால் சைபர் பாதுகாப்பு எதுவுமே இல்லாமல் செயல்பட்டு வந்துள்ளது. இதன்காரணமாக சைபர் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் சாப்டேவர்கள் எதுவுமே இந்தக் கணினிகளில் இயங்கவில்லை என்று கணினியை ஆய்வு செய்த குழுவினர் கூறியுள்ளனர்.
மேலும் வி.ஐ.பிக்களுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்த கோப்புகள் எதுவும் பாதிக்கப்படாததால் தமிழ்நாடு அரசின் அன்றாடச் செயல்பாடுகளில் இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனக் கூறியுள்ளனர்.


கூடுதலாக, எதிர்காலத்தில் இதுபோன்ற சூழல்களைக் கையாளத் தங்களுக்கு ஒரு தேர்ந்த தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்புக் கொள்கையும் கணினி தடயவியலில் தேர்ந்த நபர்களும் தேவைப்படுவதாகக் கூறுகிறார் இதுகுறித்த ஆய்வுக்குழுவில் இருக்கும் மூத்த அதிகாரி.




ஆளுநர் பதவியேற்பு நிகழ்வில் குழப்படி!


தமிழ்நாடு அரசின் புதிய ஆளுநராக இன்று ரவி பொறுப்பேற்றிருக்கும் நிலையில் அவரது பதவியேற்பு விழாவில் நிகழ்ந்த சர்ச்சைக்கும் இந்த சைபர் அட்டாக்தான் காரணம் எனக் கூறப்படுகிறது. முன்னதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய எம்.பிக்கள் ஆகியோர் பதவியேற்பு நிகழ்வில் பின்னுக்குத் தள்ளப்பட்டு முறையே எட்டாவது வரிசை மற்றும் ஒன்பதாவது வரிசைகளில் அமரவைக்கப்பட்டிருந்தனர். 


அரசு விழா நிகழ்வுகளில் இதுபோன்ற இருக்கைகள் சரிபார்ப்பதை பொதுத்துறைதான் கையாளும். ஆனால் நேற்று பொதுத்துறையின் நெறிமுறை டேட்டாக்கள்தான் களவாடப்பட்டது என்னும் நிலையில் இன்று வி.ஐ.பிக்களை அமரவைப்பதில் குழப்பம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.