குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதோடு போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட நடிகை காவ்யா தாப்பர் கைது செய்யப்பட்டார். மும்பையை சேர்ந்தவர் நடிகை காவ்யா தாப்பர்.  இவர் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகர் ஆரவ் உடன் இணைந்து மார்க்கெட் ராஜா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.  இதேபோல், ஒருசில தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் காவ்யா தாப்பர் நடித்துள்ளார். இப்படி தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ள நடிகை காவ்யா தாப்பர் வியாழக்கிழமை அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.



காவ்யா தாப்பர் குடிபோதையில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளை கெட்ட வார்த்தையில் திட்டி விட்டு சண்டையிட்டதாக கூறப்படுகிறது. 26 வயது ஆகும் நடிகை காவ்யா தாப்பர் வெள்ளிக்கிழமை அந்தேரி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். நள்ளிரவு 1 மணிக்கு மேல் ஜே டபிள்யூ மேரியட் ஹோட்டலுக்கு அருகில் இருந்த காவ்யா தாப்பர் தனது ஆண் நண்பர்களுடன் இரவு விருந்தில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. காவ்யா தாப்பர் குடிபோதையில் காரை மற்றொரு வாகனத்தின் மீது மோதியுள்ளார். போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர். அவர்கள் நடிகை காவ்யா தாப்பரை விசாரிக்கத் தொடங்கியபோது, அவர் காவல் துறையினரை கெட்ட வார்த்தைகளால் திட்டி, அவர்களை அடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.






கான்ஸ்டபிள் தனது அறிக்கையில், போலிஸ் சம்பவ இடத்திற்கு சென்றபோது, ​​​​நடிகை காவ்யா தாப்பர் அவர்களை அசிங்கமாக திட்டியதாகவும், தடுக்க முயன்றபோது போலிஸ்காரரின் சீருடை காலரைப் பிடித்ததாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் காவ்யா தாப்பர் கைது செய்யப்பட்டு அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.


பைகுல்லா பெண்கள் சிறைக்கு அனுப்பப்பட்ட அவர், ஜாமீன் கிடைக்கும் வரை அங்கேயே இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது, காவல்துறையினரை கடமையை செய்யவிடாமல் தடுத்து, தாக்க முற்பட்டது ஆகிய பிரிவுகள் உட்பட, ஐபிசி 353,504,332,427 ஆகிய பிரிவின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.