சீசிங் ராஜா முக்கிய கூட்டாளி கைது.. பிரபல ரவுடி சஜித் கைதுக்கு பின்னணியில் ஆம்ஸ்ட்ராங் வழக்கா ? 

பிரபல ரவுடி சீசிங் ராஜா கூட்டாளி சஜித் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

சென்னை புறநகர் பகுதிகளில், பல்வேறு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகம் வருகின்றன. சென்னை புறநகர் பகுதிகள் அதிக வளர்ச்சியை நோக்கி ஒரு புறம் பயணித்து வரும் நிலையில்,  மறுபடியும் ரவுடிகளின் அட்டகாசமும் அதிகரித்து வருகிறது. அவப்பொழுது நடைபெறும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களால், பொதுமக்கள் மிகவும் பாதிப்படைகின்றனர்.  தொடர்ந்து ரவுடிகளின் பெருக்கம் அதிகரித்து வருவதால், தொழில் செய்பவர்கள்,  சிறு-குறு தொழிற்சாலை அதிபர்களை மிரட்டி மாமுல் பெறுவதும் அதிகரித்து வருகிறது.

Continues below advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு...


இந்தநிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அவரது கூட்டாளி திருவேங்கடம் உட்பட 21 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

கொலை தொடர்பாக திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், ரவுடிகள் என பல தரப்பட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் வழக்கில் பலதரப்பட்ட , நபர்கள் கைது செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சீசிங் ராஜா கூட்டாளி


இந்த கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான சீசிங் ராஜா, சம்பவ செந்தில் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், ரவுடி சீசிங் ராஜாவின் நெருங்கிய கூட்டாளியும், அவரது நண்பருமான பிரபல ரவுடி சஜித், தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன் தலைமையிலான தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். சஜித் மீது கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு,  கொள்ளை வழக்குகள் ஆகியவை நிலுவையில் உள்ளன. குறிப்பாக  நெடுங்குன்றம் சூர்யாவின் தம்பி உதயா கொலை வழக்கு,  உள்ளிட்ட 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

ரவுடி சஜித், போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ரவுடி சீசிங் ராஜாவுடன், சஜித் தொடர்பில் உள்ளாரா, சீசிங் ராஜா இருக்கும் இடம் சஜித்துக்கு தெரியுமா என தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சீசிங் ராஜா

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரம் ராதாகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (எ) சீசிங் ராஜா. வழிப்பறி குற்றவாளியாக சிறு குற்றங்களில் துவங்கிய ராஜா, படிப்படியாக வளர்ந்து ஏ (A+) ப்ளஸ் குற்றவாளியாக வளர்ந்தார். ராஜா சென்னை புறநகர் பகுதிகளில் தொழிலதிபர்களை மிரட்டுவது, ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டுவது, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். அதேபோல தொழிலதிபர்களை மிரட்டும் கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

சீசிங் ராஜா மீது தாம்பரம், சிட்லபாக்கம், கூடுவாஞ்சேரி, சேலையூர், செங்கல்பட்டு, புளியந்தோப்பு, ராஜமங்கலம், அதேபோல தென் சென்னை பகுதிகளில் உள்ள காவல் நிலையங்கள், தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள காவல் நிலையங்களில், 5 கொலை வழக்குகளும், 5 கொலை முயற்சி வழக்குகளும், ஆள்கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட 33 வழக்குகள், ராஜா மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜா மீது இதுவரை 7 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சீசிங் ராஜா தொடர்புள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Continues below advertisement