Swiss Woman Dead: சுவிட்சர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் காதல் விவகாரத்தில் டெல்லியில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்து பெண் கொலை:
மேற்கு டெல்லியின் திலக் நகர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி அருகே கடந்த வெள்ளிக்கிழமையன்று, அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. கை, கால்கள் கட்டப்பட்டு, குப்பை அள்ள பயன்படுத்தப்படும் பாலிதீன் கவர் கொண்டு உடலின் மேற்பகுதி மூடப்பட்டு இருந்தது. விசாரணையில் அது சுவிட்சர்லாந்தை சேர்ந்த 30 வயதை கடந்த பெர்கர் எனும் பெண் என தெரிய வந்தது. இந்த கொலை வழக்கில் குர்பிரீத் சிங் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நடந்தது என்ன?
சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணை தொடர்பான தகவல் வெளியகியுள்ளது. அதன்படி, “கைது செய்யப்பட்டுள்ள குர்ப்ரீத் அடிக்கடி சுவிட்சர்லாந்து சென்று வந்துள்ளார். அந்த சமயங்களில் ஏற்பட்ட சந்திப்பை தொடர்ந்து, பெர்கர் உடன் நெருங்கி பழக தொடங்கியுள்ளார். ஆனால், நாளடைவில் பெர்கர் வேறொரு நபருடன் தொடர்பில் இருப்பதாக குர்ப்ரீத்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்து அந்த பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, நட்பாக பேசி பெர்கரை கடந்த அக்டோபர் 11ம் தேதி இந்தியாவிற்கு வரவழைத்துள்ளார். தொடர்ந்து டெல்லியில் பல இடங்களுக்கு அவர்கள் சென்று வந்துள்ளனர். 5 நாட்களுக்குப் பிறகு குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று அந்த பெண்ணின் கை, கால்களை கட்டி குர்ப்ரீத் கொலை செய்துள்ளார். தொடர்ந்து உடலை ஒரு காரில் மறைத்து வைத்துள்ளார். அடுத்த சில நாட்களுக்கு அந்த உடலை காரில் வைத்துக்கொண்டே பயணம் செய்துள்ளார். இதனிடையே உடல் அழுக ஆரம்பித்து துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. இதனால், உடலை அவர் சாலையில் வீசிச் சென்றுள்ளார். முன்னதாக அந்த பெண்ணின் முகத்தை சிதைக்க குர்பிரீத் முயற்சித்தார்” எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
குற்றவாளி சிக்கியது எப்படி?
உடலை கைப்பற்றிய விசாரணயை தீவிரப்படுத்திய போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அதில் கிடைத்த வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டு ஒரு பெண்ணை அணுகியுள்ளனர். ஆனால், இரண்டு மாதங்களுக்கு முன்பே காரை குர்பிரீத் என்பவருக்கு விற்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
அததொடர்ந்து தான் குர்ப்ரீத்தை கைது செய்துள்ளனர். சடலம் வைக்கப்பட்டிருந்த காரையும், குர்பிரீத்தின் மற்றொரு நான்கு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். குர்பிரீத்தின் வீட்டில் இருந்து ரூ.2.25 கோடி ரொக்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது.