கள்ளக்குறிச்சி  மாவட்டம் மணலூர்பேட்டை அடுத்த முருக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர்  சரோஜா வயது (50) இவருடைய மகள் மகாலட்சுமி வயது ( 33)  விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மகாலட்சுமியை விழுப்புரம் மாவட்டம்  திருக்கோவிலூர் அடுத்த தேவிகாபுரத்தில் ஆட்டோ ஓட்டுநரான முருகன் வயது (48) என்பவருடன்  கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றது. 


திருமணம் ஆகி கணவருடன் தேவிகாபுரத்தில் வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. முருகன் குடித்து விட்டு தினந்தோறும் வீட்டிற்கு வருவார். இதனால் இவர்களுக்கு இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு ஏற்பட்டும் போது எல்லாம் மகாலட்சுமி அவருடைய தாய் வீடான முருக்கம்பாடி கிராமத்திற்கு சென்று விடுவாராம், சிறிதுநாட்கள் கழித்து கணவர் முருகன் சமாதானம் கூறி மீண்டும் அவர் வீட்டிற்கு அழைத்து சென்றுவிடுவார் என கூறப்படுகிறது .




ஒரு நாள் திடிரென மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்த முருகன், வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அவர் மனைவியை அடிக்க துவங்கினர். இதனால் முருகனின் வீட்டிலிருந்து மகாலட்சுமி  தனது சொந்த ஊரான முருக்கம்பாடியில் உள்ள  தாயார் சரோஜா வீட்டிற்கு  ஐந்து நாட்கள் முன்பு வந்துள்ளார். 


இந்நிலையில்  முருகன் வழக்கம் போல் தனது மாமியார் வீட்டிற்கு வந்து மகாலட்சுமி தன்னுடன் சேர்ந்து வாழும்படி வற்புறுத்தியுள்ளளார், இதற்கு மேல் நான் சந்தேகம் படமாட்டேன் என கூறி விட்டுஅங்கேயே இருந்துள்ளார். மாலை மாமியார் வீட்டில் உணவு சாப்பிட்டு விட்டு வெளியே சென்றுள்ளார். அங்குள்ள மதுபான கடையில் மது வாங்கி அருந்திய முருகன், அதன் பின்னர் வீட்டிற்கு வந்து இரவு அங்கேயே தங்கியுள்ளார்.


 




 


போதையிலிருந்த முருகனுக்கு மனைவி மற்றொருவருடன் தொடர்பில் இருந்ததாக கனவு வந்துள்ளது. இதனால்  ஆத்திரம் அடைந்த முருகன், நள்ளிரவு 1மணியளவில் தகராறு செய்துள்ளார். அப்போது  மனைவி மற்றும் மாமியாரை  கடப்பாரையால் மண்டையில் தாக்கியுள்ளார். வலியில் மகாலட்சுமியும் அவருடைய தாயாரும்  கூச்சலிட்டுள்ளனர். இதனைக்கேட்ட அக்கம் பக்கத்தினர், மற்றும் உறவினர்கள் ஓடிவந்து வீட்டருக்கே பார்த்த போது முருகன் வெளியில் தலைதெறிக்க ஓடியுள்ளார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது மகாலட்சுமியும் அவரது தாயார் சரோஜாவும், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளனர்.


அங்கு இருந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக ஆம்புலன்சுக்கு போன் செய்து இருவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றி திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவ மனைக்கு செல்லும் வழியிலே சரோஜா இறந்துள்ளார், அதன் பிறகு உயிருக்கு போராடிய மகாலட்சுமி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்து போனார். 




 தகவலறிந்த மாவட்ட கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் நேரில் வந்து ஆய்வு செய்து அங்கு உள்ள உறவினர் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டார். மற்றும் மாவட்ட துணை கண்காணிப்பாளர் மற்றும் மணலூர்பேட்டை காவல் துறையினர்  இந்த கொலை குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இரு உடல்களையும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தப்பியோடிய முருகனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.