அடிடா அவள, உதைட அவள என்பதெல்லாம் பழசு. மனித வெடிகுண்டாக மாறி மனைவியைக் கொலை செய்வதுதான் புதுசு என திகைக்க வைத்திருக்கிறார் ஒருவர்.


மனித வெடிகுண்டு என்றவுடன், இதோ எங்கோ பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நடந்தது என்றெல்லாம் யோசிக்காதீங்க. நம்ம இந்தியாவில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் அதன் தலைநர் அய்ஸ்வாலில் இந்த கொடூர கொலைச் சம்பவம் நடந்திருக்கிறது. கடந்த 5 ஆம் தேதி நடந்த இச்சம்பவம் இப்போதுதான் வெளியில் வந்துள்ளது. 


போலீஸ் அறிக்கை:


இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது:


மிசோரம் மாநிலம் லுங்லெய் நகரத்தை சேர்ந்தவர் தலங் தியாங்கிலிமி. 61 வயதான இவர் தனது 62 வயதான மனைவி ரோஹிம்க்ளியானாவைக் கொலை செய்ய திட்டம் தீட்டினார். அதற்கு அவர் மனித வெடிகுண்டு தாக்குதலைத் தேர்ந்தெடுத்தார். தியாங்கிலிமி வெடிகுண்டை வெடிக்கச் செய்ய அவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழக்க அவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.


முதலில் நாங்கள் இது எதோ தீவிரவாத தாக்குதலோ என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டோம். பின்னர் தான் இல்லை இது தனிப்பட்ட முறையில் ஒரு தனிநபர் அவரது முன்னாள் மனைவி மீது நடத்திய கொலை வெறித் தாக்குதல் எனக் கண்டுபிடித்தோம். 


லுங்லெய் மாவட்டத்தின் சன்மாரி லாங் எனும் பகுதியில் அரசு அலுவலகத்துக்கு அருகிலேயே இந்தச் சம்பவம் நடந்ததால் தான் கூடுதல் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இறந்த போன தியாங்கிலிமி, ரோஹிம்க்ளியானா இருவருக்கும் இடையே கடந்த ஆண்டு தான் விவாகரத்து நடந்துள்ளது.


லாங் பஜாரில் தான் இவரும் இவரது மகளும் அருகருகே காய்கறிக் கடை நடத்துகின்றனர். சம்பவத்தன்று தியாங்கிலிமி, தனது முன்னாள் மனைவி ரோஹிம்க்ளியானாவின் காய்கறிக் கடைக்குச் சென்றுள்ளார். அங்கு நின்று சிகரெட் புகைத்துள்ளார். அதற்கு ரோஹிம்க்ளியானா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மனைவியுடன் சமாதானமாக பேசுவதுபோல் பேச்சுக்கொடுத்து தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளார். பின்னர் மனைவியைப் பாசமாகக் கட்டியணைப்பது போல் கட்டிப்பிடித்து தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் தியாங்கிலிமி சம்பவ இடத்திலேயே உயிரிழக்க அவரது மனைவி மருத்துவமனையில் இறந்தார். 


இவ்வாறு போலீஸ் அதிகார் வான்ச்சவாங் கூறினார். மேலும் வெடிகுண்டு தயாரிக்க தியாங்கிலிமி ஜெலட்டின் குச்சிகளைப் பயன்படுத்தியதாகவும் அந்த அதிகாரி கூறினார்.


மிசோரம் மாநிலத்தைப் பொறுத்தவரை விவாகரத்து சர்வ சாதாரணம் என்றாலும் இதுபோன்று மனித வெடிகுண்டாக மாறி முன்னாள் மனைவியைக் கொலை செய்வதெல்லாம் இதுவே முதன்முறை என்று காவல்துறை அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளது.