நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே டிரைவராக பணிபுரியும் ஒருவர் வெளியூரில் தங்கி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது 17 வயது மகள் அரசு மேல் நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த சூழலில் சரஸ்வதி பூஜை அன்று வீட்டில் அனைவரும் பூஜை செய்து சாமி கும்பிட்டு விட்டு பின் குடும்பத்துடன் அனைவரும் அருகே உள்ள கோயிலுக்கு சென்று உள்ளனர். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பிய அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இரவு பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது மாணவி தனக்கு தூக்கம் வருவதாக சொல்லிவிட்டு மாடியில் உள்ள அறைக்கு சென்று உள்ளார்.
இரவில் சாப்பிடாமல் தூங்க சென்ற தனது மகளை சாப்பிட அழைப்பதற்காக தாய் மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு கதவு பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டி அழைத்தும் அவர் கதவை திறக்காததால் தாய் அங்குள்ள ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளார். அப்போது மாணவி தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கூச்சலிட்ட அவர் கதவை உடைத்து உள்ளே சென்று அவரை மீட்டனர். மயக்க நிலையில் இருந்த அவரை அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக் கேட்ட பெற்றோர் கதறி அழுதனர்.
இது குறித்து தகவலறிந்த சேரன்மகாதேவி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்சனை காரணமா? அல்லது பள்ளியில் ஏதேனும் பிரச்சினை காரணமாக மன அழுத்தத்தில் இருந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது போன்ற கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் தற்கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்