Kalonji Seeds in Tamil: எண்ணிலடங்காத மருத்துவ குணங்களைக் கொண்டதாக இந்த கருஞ்சீரகம்(Karunjeeragam) காணப்படுகிறது. காலம் காலமாக நமது முன்னோர்களால் உணவுகளில் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. காலப்போக்கில் இந்த கருஞ்சீரகத்தின் பயன்பாடு குறைந்து வந்திருப்பதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது. இருந்தபோதும் இந்தியாவை பொறுத்த அளவில் அது மசாலா பொருட்களில் கலந்து சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


இந்த கருஞ்சீரகமானது எண்ணற்ற நோய்களை குணப்படுத்தும் ஒரு மூலிகை மருந்தாக ஆதி காலம் தொட்டே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது தற்போதும் யுனானி மருத்துவத்துறையில் இந்த கருஞ்சீரக எண்ணெய் முதன்மைப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.


கணையப் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் கருஞ்சீரகம் பெரும் பங்கு வகிப்பதாக ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எலும்பு மஜ்ஜை உற்பத்தியைச் சீராக்கி, புற்றுநோய்க் கட்டிகள் ஏற்படாதபடி பாதுகாப்பதாகவும் கூறப்படுகிறது.


மருத்துவக் குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தில் உள்ள தைமோகுயினன் (Thymoquinone) என்ற வேதிப்பொருள் வேறு எந்தத் தாவரத்திலும் இல்லை என ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது. இது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து ,கெட்ட கொழுப்புகளை கரைத்து, இதய நோய் போன்றவை வராமல் பாதுகாக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது


மேலும், ஏராளமான விட்டமின்கள்,அமினோ அமிலங்கள்,  கால்சியம், இரும்புச்சத்து போன்றவையும் இந்த கருஞ்சீரகத்தில் உள்ளன. இந்த கருஞ்சீரக மூலிகை தாவரமானது தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவை பூர்விகமாகக் கொண்டது என கூறப்படுகிறது. இதனை அரபு நாடுகளில் அதிகளவாக உணவுகளில் சேர்த்து பயன்படுத்துவதாக அறிய முடிகிறது.


அதேபோல் இந்த கருஞ்சீரகத்தை பல்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கிறார்கள்.அதில் ஹிந்தி மொழியில் காலாஜீரா, கலோன்ஜி, நிஜெல்லா எனவும், சமஸ்கிருதத்தில் உபகுஞ்சீரகா ,கிருஷ்ண ஜீரகா,குஞ்சிகா, எனவும், ஆங்கிலத்தில் Black cumin, Small Fennel எனது பெயர் கொண்டு அழைக்கின்றனர். குறிப்பாக , பெண்களுக்கு வரும் மாதவிடாய் கோளாறு சம்பந்தமான அனைத்து நோய்களையும் தீர்க்கும் ஒரு மருந்தாக இந்த கருஞ்சீரகம்  இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.


அதேபோல் பித்தப்பையில் ஏற்படும் கல்லையும் இந்த கருஞ்சீரகம் கரைக்கிறது. நறுமணம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு கலவையாக காணப்படும் இந்த கருஞ்சீரகம், இந்தியாவில் கறிகள், பருப்பு வகைகள், வறுத்த காய்கறிகள் மற்றும் சமோசா போன்ற  உணவுகளில்   பயன்படுத்தப்படுகிறது. சிறந்த நோய் எதிர்ப்பு மருந்தாக செயலாற்றும் கருஞ்சீரகம் உடலில் ஆஸ்துமா மற்றும் சுவாச பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.


இந்த கருஞ்சீரகத்தால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம் | Karunjeeragam Health Benefits


தோல் பிரச்சனைகளுக்கு தீர்வு:


கருஞ்சீரக எண்ணெய் மற்றும் சாத்துக்குடி சாறு ஆகியவற்றை கலந்து பயன்படுத்துவதன் மூலம் தோல் பிரச்சனைகளை சரி செய்யலாம் என கூறப்படுகிறது. ஒவ்வொரு கப் சாத்துக்குடி சாறிலும் அரை தேக்கரண்டி கருஞ்சீரக எண்ணெயை கலக்க வேண்டும். இந்த கலவையை நாள்தோறும் இரு முறை முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மற்றும் அதன் தழும்புகள் மறைந்து விடும் என கூறப்படுகிறது. அதேபோல் வெறும் கருஞ்சீரக எண்ணெயை குதிகால் வெடிப்புகளுக்கு பயன்படுத்தலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


நீரிழிவு நோய்:


நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் இந்த கருஞ்சீரகம் முக்கிய பங்காற்றுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு கப் பிளாக் டீயில் ,1/2 டீஸ்பூன் கருஞ்சீரக எண்ணெயை கலந்து குடித்து வர சில வாரங்களிலேயே நீரழிவு நோய் கட்டுக்குள் வைக்க உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.


எடை இழப்புக்கு உதவும் கருஞ்சீரகம்:


எடை குறைப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மிகவும் சிறந்த மூலிகை மருந்தாக இந்த கருஞ்சீரகம் கருதப்படுகிறது. வெதுவெதுப்பான நீரில், தேன் மற்றும் எலுமிச்சையை நன்கு கலந்து அதனுடன் சிறிய அளவில் கருஞ்சீரக தூளை சேர்த்து பருக வேண்டும். இந்த மருந்து கலவையானது உடல் எடையை சீராக குறைத்து ஆரோக்கியமாக வைக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இரத்த அழுத்தம்:


உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், அரை டீஸ்பூன் கருஞ்சீரக எண்ணெயை, வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், உயர் இரத்த அழுத்த சிக்கலுக்கு நன்மை பயக்கலாம் என கருதப்படுகிறது


சிறுநீரகத்தை பாதுகாக்கும் கருஞ்சீரகம்:


பலருக்கும் சிறுநீரக கற்கள் தற்போது ஒரு பெரும் பிரச்சனையாகவே மாறி இருக்கிறது. இந்த சிறுநீரக கற்களை கருஞ்சீரகம் கரைத்து அகற்றுகிறது. இரண்டு தேக்கரண்டி தேன்,  அரை டீஸ்பூன் கருஞ்சீரக எண்ணெயை வெது வெதுப்பான நீரில் கலந்து அருந்துவதன் மூலம் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் அகன்று விடும் என கூறப்படுகிறது. அதேபோல் சிறுநீரகத்தில் ஏற்படும் வலி‍ மற்றும் நோய்த் தொற்றுக்கும் சிறந்த நிவாரணியாக இந்த கருஞ்சீரக எண்ணெய் கலவை இருக்கிறது. இந்த மருத்துவ முறையை பயன்படுத்தும் முன் ஒரு சிறந்த சித்தா மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:


இந்த கருஞ்சீரக எண்ணெய் மற்றும் தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து அருந்துவதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெற முடிகிறது. அதிகளவு நோயெதிர்ப்பு சக்தியை வழங்கும் இந்த கருஞ்சீரக எண்ணெயை கொதிக்கும் நீரிலிட்டு அதிலிருந்து வரும் புகையை சுவாசிப்பதன் மூலம் மூக்கடைப்பு மற்றும் சைனஸ் பிரச்சனைகளிலிருந்து விடுபட உதவி புரியும் என கருதப்படுகிறது. அதேபோல் மாதவிடாய்க் கோளாறுகளின் போது வறுத்து பொடி செய்த கருஞ்சீரக தூளுடன் ,தேன் அல்லது கருப்பட்டி கலந்து, மாதவிடாய் தேதிக்கு பத்து நாட்கள் முன்பிருந்தே ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிட்டு வர வயிற்று வலி, அடி வயிறு கனம் ,ரத்தப்போக்கு உள்ளிட்ட மாதவிடாய் சிக்கல்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கருதப்படுகிறது.


மேலும் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை, அரை டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுதுடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டு வர தொடர் இருமல், நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி போன்றன சரியாகிவிடும் என சொல்லப்படுகிறது.


கருஞ்சீரகத்தை முறையாக, சரியான அளவில் மருத்துவர்களின் ஆலோசனையுடன் பயன்படுத்தவேண்டும்.


மனித உடலுக்கு தேவையான அனைத்து மருத்துவ குணங்களையும் கொண்ட கருஞ்சீரகத்தை முடிந்தளவு உணவில் சேர்த்து உண்பது சிறந்த ஆரோக்கியத்தை வழங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.