டியூசன் ஆசிரியை காதலை முறித்துக்கொண்டதால் விரக்தியில் 17 வயது மாணவன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்தவர் வசந்த் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 17) இவர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரியில் அடியெடுத்து வைக்க இருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி தனது நண்பர்களுடன் சென்னை, மாநிலக் கல்லூரிக்கு கலந்தாய்வுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய பின் திடீரென தன் அறையில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தொடர்ந்து அறையில் இருந்து வெளியே மகன் வராததைக் கண்டு சோதித்து அதிர்ந்த வசந்தின் பெற்றோர், அவரை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே வசந்த் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில், தகவல் அறிந்து அங்கு வந்த அம்பத்தூர் காவல் துறையினர் வசந்தின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வசந்தின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இவரது தற்கொலைக்கு பின்னணியில் இருந்த உண்மை தெரியவந்தது.,
அதன்படி, அம்பத்தூரில் உள்ள சர் ராமசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளியில் பயின்றுவந்த வசந்த், அதே பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்த ஷர்மிளா என்ற ஆசிரியை நடத்தி வந்த டியூஷனில் கடந்த 3 ஆண்டுகளாகப் படித்தும் வந்துள்ளார். அப்போது மாணவர் வசந்துக்கும் ஆசிரியை ஷர்மிளாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியதாகவும், தொடர்ந்து இருவரும் நெருங்கிப் பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே ஆசிரியை ஷர்மிளாவுக்கு அவரது வீட்டில் திருமணம் செய்ய முடிவெடுத்து மாப்பிள்ளை பார்த்து வந்த நிலையில், அவர் மாணவன் உடனான நட்பைத் துண்டித்துள்ளார்.
தொடர்ந்து அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், ஆசிரியை மாணவனுடனான பழக்கத்தை முழுவதுமாக துண்டித்துள்ளார்.
இதனிடையே மாணவன் பலமுறை ஷர்மிளாவிடம் பேசமுயன்றபோதும் ஆசிரியை பேச மறுத்த நிலையில், மாணவன் விரக்தியடைந்து தன் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் முன்னதாக வசந்தின் செல்ஃபோனில் இருந்த புகைப்படங்களை ஆய்வு செய்தபோது இவை அனைத்தும் வெளி வந்துள்ளதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆசிரியை நேற்று (அக்.11) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.