தனியார் மருத்துவமனையில் அலட்சியத்தால் ஆபரேஷன் செய்யப்பட்ட வாலிபரின் வயிற்றுக்குள் ஊசி வைத்து தைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அவரது வயிற்றில் இருந்து ஊசி அகற்றப்பட்டது. இதுபற்றி கொடுக்கப்பட்டுள்ள புகாரின்படி, போலீசார் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் பாதிக்கப்பட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 


சென்னை புளியந்தோப்பு பி.கே.காலனியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (28). இவர் கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர். கடந்த 30ம் தேதி கூலி வேலை செய்தபோது ரஞ்சித்குமாரின் வயிற்றில் காயம் ஏற்பட்டதால் அதற்கு சிகிச்சை பெற பட்டாளம் டிமலஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.


அங்கு ரஞ்சித்குமாருக்கு வயிற்றுப்பகுதியில் 13 தையல்கள் போட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். 3 நாட்கள் கழித்து மீண்டும் மருத்துவமனைக்கு வரவேண்டும் என்று ஊழியர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில், வீட்டுக்கு வந்த ரஞ்சித்குமாருக்கு மறுநாள் அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் இருந்து பேசிய நபர்,  உடனடியாக மருத்துவமனைக்கு வாருங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து ரஞ்சித்குமார் அங்கு சென்றபோது தையல் பிரிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு ரஞ்சித்குமார், நேற்று தானே தையல் போடப்பட்டது. அதற்குள் பிரிப்பார்களா? என்று கேட்டுள்ளார்.




அதற்கு மருத்துவமனை ஊழியர்கள், இரண்டு தையல்கள் மட்டும் பிரிக்கவேண்டும். காயம் எப்படி உள்ளது என்று பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதன்பிறகு வயிற்றில் இரண்டு தையல்களை பிரித்து, ஏதாவது குத்துகிறதா என்று கேட்டபோது ஆமாம் என்று ரஞ்சித்குமார் கூறியுள்ளார். இதையடுத்து அதே பகுதியில் உள்ள ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுத்தபோது ரஞ்சித்குமார் வயிற்றில் சிறிய அளவிலான ஊசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரஞ்சித்குமார், மருத்துவமனை நிர்வாகத்திடம்  கேட்டபோது அவர்கள்,  “மீண்டும் ஆபரேஷன் செய்து ஊசியை அப்புறப்படுத்திவிடலாம். இதை யாரிடமும் சொல்லாதீர்கள், பணம் தருகிறோம்” என்று கூறியதாக தெரிகிறது. 


ஆனால் இதை ஏற்க மறுத்த ரஞ்சித்குமார் உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்றிரவு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் இருந்த ஊசி அகற்றப்பட்டது. இதுகுறித்து ரஞ்சித்குமார் கொடுத்துள்ள புகாரின்படி, புளியந்தோப்பு போலீசார் ரஞ்சித்குமாரிடமும் மருத்துவமனை நிர்வாகத்திடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதனிடையே தனியார் மருத்துவமனை மருத்துவர் மோகன்ராஜ் புளியந்தோப்பு துணை கமிஷனர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “ரஞ்சித்குமாருடன் வந்த நபர்கள் வழக்கறிஞர்கள் என்ற போர்வையில் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டுவதாகவும் அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூபில் வீடியோக்களை காண