ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத் தான் செய்வார்கள் என்று சொல்வார்கள். அப்படிதான், சாமானியர்களை குறி வைத்து டிசைன் டிசைனாக பணத்தை திருடும் கும்பலும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.  ”பேங்க் ல இருந்து பேசுறோம், உங்க ஏடிஎம் கார்டு பின்னாடி உள்ள 16 டிஜிட் நம்பர சொல்லுங்க” என இன்னும் வட மாநில கும்பல் அப்பாவிகளுக்கு போன் செய்து ஏமாற்றி வரும் நிலையில், புதிதாக மிரட்டல் போன் கால் மூலம் பணம் பறிக்கும் மோசடி தற்போது அரங்கேறி வருகிறது.


மிரட்டல் போன் - 1


பெற்றோர் மொபல் எண்களுக்கு போன் செய்யும் அந்த நபர் ஒரு காவல் அதிகாரி போலவே பேசுவார், பின்சூழலில் போலீஸ் ஸ்டேஷன் வாக்கி டாக்கி சத்தம், கைதிகள் அலறுவது போன்ற செட்டப்புடன் அந்த போன் கால் வரும்.  அதில் பேசும் நபர், உங்கள் மகன் அல்லது மகள் போதை பொருள் பயன்படுத்தி சிக்கிக்கொண்டுள்ளார் அல்லது தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததை கண்டுபிடித்துள்ளோம் உள்ளிட்ட பொய்களை உண்மை போலவே பேசுவர். நாங்கள் விசாரித்த வரை உங்கள் பிள்ளைகளை சிக்க வைக்க சிலர் முயற்சித்துள்ளனர். அதிலிருந்து அவர்களை வெளியே கொண்டுவர நாங்கள் உதவி செய்கிறோம். இல்லையென்றால், நாளை டிவி, பேப்பர் என உங்கள் பிள்ளைகளின் புகைப்படம் வெளியாகி அவர்கள் வாழ்க்கையே கேள்விகுறியாவதோடு உங்களுக்கும் பெரும் அவமானம் ஆகிவிடும் என்பது போன்று பேசி ஏமாற்ற முயற்சிப்பர்.


உங்க பையன் கிட்ட கொடுங்கிறேன், பொண்ணு கிட்ட கொடுக்கிறேன் என போனை கொடுப்பதுபோல் கொடுத்து, அதில் நவீன தொழில்நுட்பம் மூலம் அந்த குறிப்பிட்ட பிள்ளைகளின் குரலை தத்ரூபமாக சில நொடிகள் கதறுவதுபோல் பேச வைத்து பெற்றோரை நம்ப வைப்பர். அதன்பிறகு நாங்கள் அனுப்பும் ஜி.பே நம்பருக்கு பணத்தை அனுப்புங்கள். இல்லையென்றால் உங்கள் குடும்பமே காலி என மிரட்டி பணத்தை பறிப்பர்.


இப்படிப்பட்ட போன் கால்கள் வந்தால், பதற்றமடையாமல் உடனே அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லுங்கள். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.


மிரட்டல்  போன் – 2


பேங்க் ல இருந்து பேசுறோம். உங்க அக்கவுண்ட் லாக் ஆக போகுது உடனடியா உங்க ஆதார் நம்பர், பான் நம்பர் உள்ளிட்ட விவரங்களை கொடுங்க இல்லையென்றால் இருக்கும் பணத்தை இனி எடுக்கவே முடியாது என்று உங்களை யோசிக்க விடாமால் அவசரப்படுத்தி அவர்களுக்கு தேவையான தகவல்களை பெற முயற்சிப்பர். இது மட்டுமின்றி, உங்க அக்கவுண்டுக்கு தீவிரவாதிகள் பணம் அனுப்பி வச்சுருக்காங்க. உங்கள கைது பண்ணப்போறோம் என மிரட்டியும் பணம் பறிக்கும்  முயற்சிகள் நடந்து வருகிறது.


இதற்கெல்லாம் பயந்துவிடாமல், பதற்றமடையாமல் புத்திசாலிதனமாக செயல்பட்டு உங்கள் பணத்தை காத்துக்கொள்ள வேண்டிய சூழல் இப்போது ஏற்பட்டிருக்கிறது.


மிரட்டல் போன் – 3


தொலை தொடர்பு நிறுவனத்தில் இருந்து பேசுகிறோம். பீகாரில் ஒரு பயங்கரவாதியை கைது செய்திருக்கின்றார்கள். அவர் உங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கியிருக்கிறார். உங்களது இந்த சிம் கார்டையும் முடக்க சொல்லி பீகார் போலீஸ் எங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். நீங்கள் பீகார் சைபர் கிரைம் போலீசாரை உடனே தொடர்புகொண்டு பேசுங்கள். இல்லையென்றால் உங்களுக்கு பெரிய பிரச்னை வந்துவிடும் என்று சொல்லிவிட்டு, தொடர்பு எண்களையும் அந்த நபரே உங்களுக்கு கொடுப்பார்.


அந்த எண்ணில் தொடர்புகொண்டால், அச்சு அசலாக போலீஸ் அதிகாரி போலவே பேசும் ஒரு நபர், உங்கள் சிம் கார்டு மூலம் டெல்லியில் செயல்படும் தனியார் வங்கி மேனேஜர் சட்டவிரோதமாக கோடி கணக்கான பணத்தை கையாடல் செய்து பரிமாற்றம் செய்திருக்கிறார். அது தொடர்பாக உங்களை வீடியோ காலில் உடனே விசாரிக்க வேண்டும் என்று பயமுறுத்திவிட்டு அந்த அழைப்பு துண்டிக்கப்படும். பின்னர், ஒருவர் எண்ணில் இருந்து உங்களுக்கு வாட்ஸ் – அப் மூலம் அரசு முத்திரையுடன் போலீஸ் கைது வாரண்ட், உங்கள் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் உள்ளிட்டவைகளை அனுப்பி வைப்பர்.


இதனை பார்த்து சாமானியர் எவரும் பயந்துதான்விடுவார்கள். நீங்கள் பயந்துவிட்டீர்கள் என்பதை அவர்கள் உறுதி செய்துவிட்டால், “நீங்கள் அப்பாவிதான். குற்றவாளி இல்லை. ஆனால், சூழ்நிலை ஆதாரங்கள் உங்களுக்கு எதிராக உள்ளது. உங்களை இதிலிருந்து காப்பற்ற வேண்டும் என்றால், உங்கள் வங்கி கணக்கு விபரங்களை உடனே சொல்லுங்கள் என்றோ அல்லது பணம் கொடுங்கள் என்றோ நம்மை யோசிக்கவிடாமல், பயத்தை காட்டி குழப்புவார்கள்.


சமீபத்தில் கூட முன்னாள் அதிமுக அமைச்சர் பொன்னையனுடைய மனைவிக்கு இப்படி ஒரு போன் கால் வந்துள்ளது. அவர் உடனே இது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.


எச்சரிக்கையாக இருங்கள் – பயப்படாதீர்கள் – போலீசுக்கு சொல்லுங்கள்


மேற்குறிப்பிட்டுள்ளதெல்லாம் எடுத்துக்காட்டுகள்தான். இன்னும் பல பல வகையில் அப்பாவிகளை போன் மூலம் மிரட்டி பணம் பறிக்கும் முயற்சிகள் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது.  எனவே, இப்படியான போன் கால்கள் உங்களுக்கு வந்தால் எதற்கும் பயப்படாதீர்கள். உங்களை ஒருபோன் காலில் யாரும் எதுவும் செய்துவிட முடியாது.


ஒன்று அப்படியான அழைப்புகளை தவிர்த்துவிட்டு, வரும் எண்களை பிளாக்கில் போட்டுவிடுங்கள். இரண்டு, உங்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்தால் உடனடியாக சைபர் கிரைம் போலீசாரிடமோ அல்லது அருகே உள்ள காவல் நிலையத்திலோ அல்லது காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ தொடர்புகொண்டு புகார் தெரிவியுங்கள்.