இலங்கையிலிருந்து சட்ட விரோதமாக, மதுரை வழியே வெளிநாடு தப்ப முயன்ற 23- நபர்கள் மற்றும் முகவரை நக்சலைட் தடுப்பு பிரிவு போலீஸ் கைது செய்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன் இலங்கையில் இருந்து கள்ளதோணி வழியாக தூத்துக்குடிக்கு மொத்தம் 23- நபர் தப்பினர். இவர்களில் 21- நபர்கள் இலங்கை தமிழர்கள் மற்ற இருவர் இலங்கையை சேர்ந்த சிங்களவர். இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து வாகனம் மூலமாக மதுரை வந்து, மதுரை கப்பலூர் அருகே உள்ள பாழடைந்த தொழிற்சாலை ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.
இலங்கையை சேர்ந்த நபர்களுக்கு கனடா நாட்டிற்கு அனுமதி இல்லாத நிலையில், மதுரையில் உள்ள முகவர் காசிவிஸ்வநாதன் என்பவர் மூலம் போலி ஆவணம் தயார் செய்யும் பணி நடைபெற்றுள்ளது. இலங்கையில் இருந்து தப்பிய நபர்கள், கனடாவிற்கு உறுதியாக செல்லவேண்டும் என பல்வேறு முயற்சி எடுத்துவந்துள்ளனர். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளுக்கு செல்வதற்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், மதுரையிலேயே தலைமறைவாக இருந்துள்ளனர். போலி ஆவணங்கள் தயாரித்து இலங்கை சேர்ந்தவர்களை நாடு கடத்த முயற்சி செய்வதாக நக்சல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து கப்பலூர் பகுதியைச் சேர்ந்த காசிவிஸ்வநாதன் என்பவரை கைது செய்த காவல்துறையினர் அவரது, கட்டுப்பாட்டில் இருந்த 23 இலங்கையை சேர்ந்த வாலிபர்களையும் கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து போலியான ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவர்களை மதுரையில் தங்க வைக்க உதவியதாக தலைமறைவாக உள்ள இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் 23-பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்னதாக அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இலங்கையை சேர்ந்த 23-பேர் கள்ளதோணி மூலமாக மதுரைக்கு தப்பி வந்த விவகாரம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காவல்துறையினர் சிலர் நம்மிடம்...,” இலங்கையில் இருந்து தப்பித்த நபர்கள் தூத்துக்குடி கடரோல பகுதியில் சுற்றி வந்துள்ளனர். ஊரடங்கு சமயத்தில் கடலோர பகுதியில் சுற்றுவந்தால் கண்டிப்பாக மாட்டிக் கொள்வோம் என மதுரை வந்தடைந்தனர். கப்பலூர் பகுதியில் பல்வேறு நிறுவனங்கள் இயங்காத சூழலில் இலங்கையில் இருந்து தப்பித்த நபர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனினும் உணவு தேவை உள்ளிட்டவைகள் பூர்த்தி செய்வதில் சிக்கல் இருந்துள்ளது. இதனால் அடிக்கடி சிலர் மட்டும் வெளியே சென்று உணவு வாங்கிவந்துள்ளனர். ஆனால் இவர்கள் சுற்றிவந்தது, நக்சலைட் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் தப்பி வந்த 23 மூன்று நபர்களையும் திட்டம் தீட்டி பிடுத்துவிட்டனர். இது தொடர்பாக இன்னும் பலர் சிக்கலாம்” என தெரிவித்தனர்.
இதை மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ‛ட்ரீட்’ கேட்டு தொல்லை தந்த அதிகாரி; மதுரையில் மடக்கி பிடித்தது சிபிஐ!