கரூரில் புதிதாக துவங்கப்படவுள்ள ஹார்டுவேர், எலக்ட்ரிக்கல் கடையில் வேலை பார்க்க வந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த இளைஞர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். கடை நிர்வாகத்தினரிடம் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள்  வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது




கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் புதிதாக துவங்கப்படவுள்ள சரவணா ஏஜென்சி என்ற ஹார்டுவேர், எலக்ட்ரிக்கல் கடை ஒன்று துவங்கப்படவுள்ளது. குடோன் போன்ற அமைப்பு உள்ள பெரிய கடையில் கட்டுமான பணிக்கு தேவையான எலக்ட்ரிக்கல் மற்றும் ஹார்டுவேர் பொருட்கள் புதிதாக இறக்கி வைக்கப்பட்டுள்ளன. புதிய கடை திறக்க உள்ள நிலையில், அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடையில் யுபிஎஸ் பொறுத்தும் எலக்ட்ரிக்கல் வேலை பார்க்க ராயனூர் பகுதியில் அமைந்துள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த சுரேஷ் என்கிற துறை (34) வந்துள்ளார். 



மதியம் சுமார் 3.30 மணி அளவில் கடை மேலாளர் அழைப்பின் பேரில் சுரேசை பார்ப்பதற்காக நண்பர்கள் வந்துள்ளனர். அப்போது இளைஞர் சுரேஷ் மர்மமான முறையில் சடலமாக தரையில் கிடந்துள்ளார். அதிர்ச்சியடைந்த நண்பர்கள் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்துவிட்டு சுரேஷின் உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.  ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர்கள் வந்து பார்த்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று உறுதி செய்துள்ளனர். 


கடை நிர்வாகத்தினரிடம் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இறப்பிற்கான காரணம் குறித்து கேட்டபோது, அவர்கள் தங்களுக்கு தெரியாது என்று அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கடை மேலாளர் மற்றும் நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், இறந்த சுரேஷிற்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளதால் அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுள்ளனர்.


சம்பவ இடத்தில் பரபரப்பு நிலவுவதால் கரூர் நகர காவல் துறையினர் இருதரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 


 



கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X


மேலும், சுரேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னரே இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.