இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகள், படகில் கடத்தி வரப்படுவதாக மத்திய பாதுகாப்பு பிரிவினருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கிய தென் கடல் எனப்படும் மன்னார் வளைகுடா கடலில்  இந்திய கடலோர காவல் படையினரின் உதவியுடன் மத்திய வருவாய் புலனாய்வு அமலாக்கத்துறை அதிகாரிகள்  நேற்று காலை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 


அப்போது அக்கடலில் அதிவிரைவில் வந்த பைபர் படகு மண்டபம் தென் கடற்கரை நோக்கி விரைந்தது. அங்கு வந்த பாம்பனைச் சேர்ந்த பைபர் படகை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். அதிலிருந்து தப்பிக்க முயன்ற 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வேதாளையைச் சேர்ந்த முஹமது நாசர், அப்துல் கனி, தங்கச்சமடம் பகுதியைச் சேர்ந்த ரவி ஆகியோர் என தெரிந்தது. அவர்கள் வந்த பாம்பனைச் சேர்ந்த பைபர் படகில் தங்கக் கட்டிகளை கடத்தி வந்தனரா? பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளின் பிடியில் இருந்து தப்பிக்க தங்கக் கட்டிகளை நடுக்கடலில் தூக்கி எறிந்து விட்டு வந்தனரா? என்ற கோணத்தில் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல் படை முகாமில் வைத்து அன்றிரவு முழுவதும் விடிய, விடிய விசாரித்தனர். 




இலங்கையில் இருந்து கடத்தல் கும்பல் கொடுத்தனுப்பி 2 பார்சலை அதிகாரிகளின் கண்காணிப்பை அறிந்து கீழக்கரை-மண்டபம் கடற்பரப்பு மணாலி தீவு பகுதியில் நடுக்கடலில் தூக்கி எறிந்ததாக இந்த 3 பேர் அளித்த தகவலின் அடிப்படையில் கடலுக்கு அடியில் சென்று சங்கு எடுக்கும் மீனவர்கள் மற்றும் ஸ்கூபா டைவர்ஸ் உதவியுடன் தேடும் பணியில் மத்திய வருவாய் புலனாய்வு துறை, இந்திய கடலோரக் காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகளை  கடத்திக்கொண்டு மற்றொரு படகு மண்டபம் அருகே வேதாளை கடற்பகுதிக்கு வருவதாக இந்திய கடலோரக் காவல் படையினருக்கு இன்று அதிகாலை தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில், அங்கு விரைந்த இந்திய கடலோரக் காவல் படையினர் வேதாளை கடற்கரை பகுதிக்கு வந்த பைபர் படகை சுற்றி வளைத்தனர். அதில் இருந்த வேதாளையைச் சேர்ந்த முஹமது அசார், சாதிக் அலி  ஆகியோரை பிடித்தனர். அவர்களிடம் மேற்கொண்ட துரித  விசாரணை படி, படகில் மறைத்து வைத்திருந்த  ரூ.4 கோடி மதிப்பில் சுமார் 10 கிலோவுக்கும் அதிகமான உருக்கிய தங்கத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரித்து  வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண