கோயம்புத்தூரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயங்கர ஆயுதங்களுடன் ரீல்ஸ் வெளியிடும் இளம்பெண்ணை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 


கோவை மாவட்டம் உக்கடத்தில் உள்ள கோட்டை ஈஸ்வரி கோயில் முன்பு  கடந்த சில மாதங்களுக்கு முன், கார் குண்டு வெடிப்பு ஒன்று நிகழ்ந்தது.  இதில் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஜமீஷா மொபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கோவையில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு சமூக வலைத்தளக் கணக்குகளில் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ, புகைப்படம் பதிவிடும் நபர்கள்  போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்க. இதுதொடர்பாக நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. 


அந்த வகையில் பிரகா சகோதரர்கள் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில இளைஞர்கள் பொம்மை துப்பாக்கி தொடங்கி பயங்கர ஆயுதங்களுடன் வீடியோக்கள் வெளியிட்டு வந்தனர். இந்த பக்கத்தை கோவையில் பிரபலமான ரவுடிகள் பின்தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் மகள் வினோதினி என்ற தமன்னா என்ற இளம்பெண்ணும் ஒருவர். இவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பயங்கர ஆயுதங்களுடன், புகைப்பிடிப்பது போன்ற வீடியோக்களை வெளியிட்டு வந்தார். 


தமன்னா பல ஆண்டுகளாக கோவை பீளமேடு பகுதியில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வழக்கில் வினோதினி என்ற தமன்னா, தனது காதலனோடு கைது செய்யப்பட்டார்.பின்னர் வெளியில் வந்த அவர் இன்ஸ்டாகிராமில் இத்தகைய வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. 


இந்நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியில், இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். அந்த வகையில் இளம்பெண் வினோதினி என்ற தமன்னாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இவர் தனது வீடியோக்கள் மூலம் 2 ரவுடி குழுக்களுக்கு இடையே பகையை வளர்க்க முயற்சி செய்ததாக காவல் ஆணையர் கூறியுள்ளார்.