மகளிர் பிரிமர் லீக்கில் இன்று (07/03/2023) உத்திர பிரதேச வாரியர்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மும்பையில் மோதிக்கொண்டன. டாஸ் வென்ற உத்தர பிரதேச வாரியரஸ் அணி பந்து வீச தீர்மானித்தது. ஆனால் தான் எடுத்த முடிவு மிகவும் தவறான முடிவு என சிறிது நேரத்தில் உணர்ந்து இருப்பார் அந்த அணியின் கேப்டன் ஹேலி. போட்டி தொடங்கிய கணம் முதல் ஆட்டம் டெல்லி அணியின் வசம் தான் இருந்தது. குறிப்பாக உ.பி அணியின் பந்து வீச்சை ஏதோ பரம்பரை பகை போல், டெல்லி அணியின் மெக் லேனிங் பந்துகளை மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும், பவுண்டரிகளை விரட்டினார். இதற்கிடையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தது. ஆனாலும், ரன் ரேட் குறையாமல் லேனிங் பார்த்துக் கொண்டார். 


 

குறுக்கிட்ட மழை

 

9 ஓவர்கள் முடிந்த நிலையில் போட்டியில் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி 20 நிமிடங்கள் தடைபட்டது. அதன் பின்னர் போட்டியில் எந்தவிதமான ஓவர் குறைப்புகளும் இன்றி மீண்டும் தொடங்கப்பட்டது. சிறப்பாக விளையாடிவந்த மெக் லேனிங் அரைசதம் கடந்து சதத்தை நெருங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிறப்பாக விளையாடி வந்த மெக் லேனிங் 42 பந்தில் 70 ரன்கள் குவித்த நிலையில் அவுட் ஆனார். அவர் 10 பவுண்டரி 3 சிக்ஸர் விளாசினார். 

விக்கெட் விழுந்தாலும் அதிரடியை குறைக்காத டெல்லி அணியினர் ரன்ரேட்டை மட்டும் குறைய விடவில்லை. 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் சேர்த்து, 212 ரன்களை உ.பி. வாரியர்ஸ் அணிக்கு நிர்ணயித்தது. 

 

அதன் பின்னர் களமிறங்கிய உ.பி. அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. பவர் ப்ளேயில் மட்டும் 3 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் மட்டுமே சேர்த்து பரிதாப நிலைக்கு ஆளானது. அதன் பின்னர் 4வது விக்கெட்டும் 10.1 ஓவரில் விழ, உ.பி. வாரியர்ஸ் அணி 71 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. 59 பந்துகளில் 141 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில் இருந்து,  உ.பி. அணியை தாலிய மிஹ்ராத் மற்றும் தேவிகா வைதியா அணியை ஒரு கௌரவமான நிலைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்தனர். 

 

டெல்லி வெற்றி 

 

ஆஸ்திரேலிய அணியின் தாலியா மிஹ்ராத் ஒற்றை நம்பிக்கையாக உ.பி அணிக்கு இருந்தார். 15 ஓவர்கள் முடிவில் உ.பி அணி 109 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து முயற்சி செய்து வந்தது. ஆனால் ஓவருக்கு 20 ரன்கள் தேவை என்ற நிலையில் உ.பி. அணி இருந்தது.

வெற்றி பெறுவது கடினம் என்றாலும், தோல்வியின் வித்தியாசத்தினை குறைக்க உ.பி அணி போராடியது. 20 ஓவர்கள் முடிவில் உ.பி. வாரியர்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது.  உத்தர பிரதேச வாரியர்ஸ் அணியின் சார்பில் தாலியா மெஹ்ராத் மட்டும் 50 பந்துகளில் 90 ரன்கள் விளாசியிருந்தார். அதில் 11 பவுண்டரி 4 சிக்ஸர் அடங்கும். இதனால் டெல்லி அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.