புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தவர் கருப்பையா (60). கடந்த 19-ம் தேதி காலை 6 மணிக்கு பேரூராட்சி அலுவலகம் முன்பு மயங்கிய நிலையில் கிடப்பதாக அவரது மகன் பழனிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பேரூராட்சி அலுவலகத்திற்கு விரைந்த பழனி கருப்பையாவை மீட்டு அருகில் இருந்த கீரனூர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். கருப்பையாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து, கீரனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துள்ளனர்.
மேலும், கருப்பையாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை மருத்துவர்கள் சமர்ப்பித்துள்ளனர். அதில், கருப்பையாவிற்கு மதுவில் குருணை மருந்து கலந்து கொடுத்து, கழுத்தில் மிதித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால், மகன் பழனியிடம் காவல் துறையினர் விசாரித்துள்ளனர்.
விசாரணையில், பழனியும் அவரது நண்பன் ஆனந்தனும் கருப்பையாவை கொலை செய்து நாடகமாடிய விவரம் தெரியவந்துள்ளது. துப்புரவு பணியில் இருக்கும்போதே தந்தை இறந்தால், அந்த பணி மகனுக்கு வழங்கப்படும் என்பதால் இருவரும் சேர்ந்து கருப்பையாவை கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். கருப்பையாவை கொலை செய்வதற்காக மதுவில் குருணை மருந்து கலந்து கொடுத்து கொலை செய்துள்ளனர். மதுவை அருந்திய கருப்பையா, சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். அதனை அடுத்து, அவரது கழுத்தில் மிதித்து கொலை செய்துள்ளனர். இறந்தவரின் உடலை கீரனூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு முன்பே போட்டுவிட்டு சென்றுள்ளனர்.
விசாரணையில் இந்த விவரம் தெரிய வந்ததால், சந்தேக மரணம் என்பதை மாற்றி கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர் காவல் துறையினர். வேலைக்காக தந்தையை சொந்த மகனே கொலை செய்திருக்கும் சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பிற முக்கியச் செய்திகள்:
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்