தஞ்சை அருகே சூரக்கோட்டை அம்மா குளம் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன தம்பி (55). கூலி தொழிலாளி. இவரது மனைவி அமுதா. இவர்களின் மகன் சின்னத்துரை (24). கரூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
சின்னதம்பி வேலை செய்து கிடைக்கும் பணத்தில் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். மேலும் வீட்டு செலவிற்கும் பணம் கொடுப்பதில்லையாம். இதனால் அடிக்கடி கணவன், மனைவியை இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தகராறின் போது சின்னதம்பி மனைவியை அடித்து விடுவார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கரூரிலிருந்து ஊருக்கு சின்னத்துரை வந்துள்ளார். அப்போதும் சின்னத்தம்பி தன் மனைவியிடம் குடிபோதையில் தகராறு செய்துள்ளார். இதை சின்னத்துரை கண்டித்துள்ளார். இருப்பினும் நேற்று மீண்டும் குடித்து விட்டு வந்து வீட்டில் சின்னத்தம்பி தகராறு செய்யவே சின்னத்துரை ஆத்திரமடைந்துள்ளார்.
இதனால் தந்தை, மகனுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தந்தை இப்படி தொடர்ந்து குடிப்பதும், தகராறு செய்வதுமாக இருப்பதால் ஆத்திரமடைந்த மகன் சின்னதுரை வீட்டின் முன் பகுதியில் தூங்கிகொண்டிருந்த தனது தந்தையின் தலையில் குழவிக்கல்லை எடுத்து வந்து போட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த சின்னத்தம்பி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சின்னத்தம்பி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சின்னத்துரையை கைது செய்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட சின்னத்துரை சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.
இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமியைக் கடத்திச் சென்று முறைகேடாக நடந்து கொண்ட இளைஞருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது.
கும்பகோணம் பகுதியில் பிளஸ் 2 படித்து வந்த 17 வயது சிறுமியை கடந்த 2020 ஜூன் 4 ஆம் தேதி காணவில்லை என சுவாமிமலை காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் செய்தனர். இதையடுத்து அச்சிறுமியைக் காவல் துறையினர் மீட்டு விசாரணை நடத்தினர்.
இதில் அச்சிறுமியை திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்துக்கு உள்பட்ட கோட்டைச்சேரியைச் சேர்ந்த குருசாமி என்பவரின் மகன் பிரகாஷ் (23) கடத்திச் சென்றதும் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, சிறுமியிடம் முறைகேடாக நடந்து கொண்டது தெரிய வந்தது.
இதுகுறித்து சுவாமிமலை காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து பிரகாஷை கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தர்ராஜன் விசாரித்து பிரகாசுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 25,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்குமாறு அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.