பேஸ்புக்கில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பெயரில் போலிக் கணக்குகள் தொடர்வது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த வருடம் நவம்பர் மாதம் சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் ஆணையர் தினகரன், ஏ.டி.ஜி.பி., ரவி, ஐ.ஜி., டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட பல முக்கிய ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பெயரிலேயே போலி பேஸ்புக் கணக்குகள் தொடங்கப்பட்டன. இதைச் செய்தது வெளிமாநிலத்தைச் சேர்ந்த கும்பல். போலிக்கணக்குகள் மூலம் அவர்கள் பணமோசடியில் ஈடுபட்டனர். போலியாக பேஸ்புக் கணக்கு தொடங்கி அவர்களின் நட்புப் பட்டியலில் உள்ள நபர்களிடம் இன்பாக்ஸில் பணம் பறிப்பதுதான் இவர்களது பாணி. அவசரத் தேவையாக ஐந்தாயிரம், பத்தாயிரம் என சிறிய சிறிய தொகை கேட்டு இந்தக் கும்பல் மோசடியில் ஈடுபட்டது.
இப்படிப் போலிக்கணக்குகளால் பதம் பார்க்கப்படும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பட்டியலில் தற்போது அடுத்த டார்கெட்டாகி உள்ளார் விஜயகுமார் ஐ.பி.எஸ்.,. இதுகுறித்துத் தனது பேஸ்புக் பக்கத்தில் எச்சரிக்கை செய்திருந்தார் அவர். இதையடுத்து, வீரப்பனைப் பிடித்தவரையே விட்டுவைக்கவில்லையா இந்த மோசடிக் கும்பல் எனக் கொதித்துள்ளனர் மக்கள்.
யாரிந்த மோசடி கும்பல்?
இந்தப் போலிக்கணக்குப் பணமோசடி கும்பல் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஊர்விட்டு ஊர் சென்று இந்த மோசடிப் பேர்வழிகளைப் பிடிக்க முடியாத சூழல் இருந்தது. எனினும் தீவிரத் தேடுதலுக்குப் பிறகு ராஜஸ்தானைச் சேர்ந்த ரவீந்திரநாத், ஷாகில் மற்றும் முஷ்டாக் ஆகிய மூவரைக் கைது செய்தது தமிழ்நாடு காவல்.
பக்காவாக உருவாக்கப்பட்ட போலிக்கணக்குகள், எப்படி?
வி.ஐ.பி. நபர்களைத் தொடர்ந்து நோட்டம் விடுவது. அவர்களது புகைப்படங்கள் தகவல்களைத் திருடுவது. அவர்கள் பெயரில் பேஸ்புக் அக்கவுண்ட் உருவாக்கி அதிலிருந்து அனைத்து நண்பர்களுக்கு ரிக்வஸ்ட் அனுப்புவது. அழைப்பை ஏற்றுக்கொண்ட நபர்களிடம் இன்பாக்ஸில் அவசரத் தேவை என நம்பவைத்துப் பணம் அனுப்பச் சொல்வது. சில பிரபல நபர்களின் பேஸ்புக் அக்கவுண்டை ஹேக் செய்ததுத்ம் தெரியவந்துள்ளது.
இதனைத் தொழில்நுட்ப ரீதியாகச் செய்யாமல் செல்போன் எண்களைப் பயன்படுத்தி ஹாக் செய்துள்ளனர். பிடிபட்ட மூவருக்கும் எழுதப்படிக்கத் தெரியாது. அதனால் கூகுள் ட்ராண்ஸ்லேட்டே கதியென அதன் மொழிபெயர்ப்பு உதவியுடன் உரையாடி வந்துள்ளனர். தமிழ்நாடு மட்டுமல்லாது தெலுங்கு தேசத்திலும் தனது கைவரிசையைக் காட்டியிருந்தது இந்தக் கும்பல். மோசடியில் ஈடுபட்டவர்கள் பிடிபட்ட நிலையிலும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீதானப் போலிக்கணக்குத் தாக்குதல் தொடர்வது காவல்துறையைத் திக்குமுக்காடச் செய்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ள நிலையில், பலர் ஏமாறும் முன் இந்த விவகாரத்தை அரசு பேஸ்புக் நிறுவனத்திடம் கொண்டு சென்று, போலிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Also Read: சரத்பவாரின் மூன்றாவது அணி கூட்டத்தை புறக்கணித்த தி.மு.க!