திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே காரும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். வேலுார் மாவட்டம், விருபாட்சிபுரத்தை சேர்ந்த தொழிலதிபர் குடும்பத்தினர் ஒரே காரில் 7 பெண்கள், 2 ஆண்கள் மற்றும் 2 குழந்தைகள் என 11 பேர், குலதெய்வ வழிபாட்டுக்காக செங்கம் புதுார் மாரியம்மன் கோயிலுக்கு சென்றனர்.


அப்போது, வேலுார் – திருவண்ணாமலை சாலையில், சந்தவாசல் அடுத்த முனியந்தாங்கல் கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரின் டயர் வெடித்ததில், கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறு மாறாக ஓடியது. அப்பொழுது திருவண்ணாமலையிலிருந்து வேலுார் நோக்கி சென்று கொண்டிருந்த எதிரே இருந்து சந்தவாசல் பகுதிக்கு நெல் மூட்டை ஏற்றி வந்த லாரி மீது மோதியதில் காரில் பயணம் செய்த கோமதி வயது (26), முனியம்மாள், வயது (60), பரிமளா,வயது (21), ராதிகா, வயது (45), மூர்த்தி, வயது (68), நிஷா, 3 மாத பெண் குழந்தை, என 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.


 




 


மேலும் சாலை விபத்தில் காயமடைந்த மாலதி (27), பூர்ணிமா (35), கலா (36), கார் ஓட்டுனர் சசிக்குமார் (25), குமரன், 3 மாத ஆண் குழந்தை உள்பட  படுகாயம் அடைந்த 5 நபர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக, வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து பற்றி தகவலறிந்ததும்  சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி மற்றும் ஆரணி கோட்டாட்சியர் கவிதா ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 


உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த கோர விபத்தால் திருவண்ணாமலை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் கண்ணமங்கலம் காவல் நிலைய காவல்துறையினர் மற்றும் சந்தவாசல் காவல் நிலைய காவல்துறையினர் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பித்து சென்ற லாரி டிரைவரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். 



இந்த நெடுஞ்சாலை பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது அதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் வேகத்தடை மற்றும் பதாகைகள் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். குலதெய்வம் கோயிலுக்கு சென்ற போது விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.