விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' திரைப்படத்தினை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள்  பாராட்டியுள்ளனர். 


எஸ். இசக்கி துரை தயாரிப்பில், வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'.


சென்னையில் நேற்று (மே.17) இப்படத்தின் சிறப்புக் காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இதில் கலந்துகொண்டு 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' திரைப்படத்தை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லகண்ணு, மகேந்திரன், மற்றும் மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி ஆகியோர் கண்டு ரசித்தனர். 




தொடர்ந்து சிறப்புக் காட்சிக்கு பின்னர் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நல்லகண்ணு, மகேந்திரன் மற்றும் திருமுருகன் காந்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.  அப்போது 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' திரைப்படத்தை அவர்கள் பெரிதும் பாராட்டினர். 


ஐநா சபையில் உள்ள வார்த்தை


இந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பேசுகையில், ”யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வார்த்தைகளைக் கேட்டதும் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. அந்தப் படம் எப்படி இருக்கோ எப்படி இல்லையோ, இந்தத் தலைப்பில் எனக்கு மகிழ்ச்சி.


’யாதும் ஊரே’ என்பது சங்க இலக்கியத்தில் உள்ள முதல் வரி. ஐக்கிய நாடுகள் சபையில் இந்த வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளது. இது தமிழுக்கு கிடைத்த பெருமை. இந்தப் பெயரைக் கேட்டு நான் படம் பார்க்க வேண்டும் என முடிவு செய்தேன். விஜய் சேதுபதியும் ரோஹாந்தும் நல்ல முயற்சி மேற்கொண்டுள்ளனர்.


இன்றைக்கு இலங்கையில் உள்ள பிரச்சினை தமிழ்நாட்டில் பேசப்படுகிறது. தமிழ்நாட்டு பிரச்சினை பல ஊர்களிலும் பேசப்படுகிறது. உலகம் பிரண்டு கிடக்கிறது. இந்த சூழலில் மக்களை இசையால், கருத்தால் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற உணர்வை உருவாக்கிய இந்தப் படத்தைப் பாராட்டுகிறேன்” எனப் பேசினார்.


அகதிகளின் பிரச்னை


தொடர்ந்து பேசிய மகேந்திரன், “நல்லக்கண்ணு ஐயா குறிப்பிட்டது போல் யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் சொல் உலகத்தில் எந்த மொழியிலும் தோன்றவில்லை. ஐக்கிய நாடுகள் சபையில் இந்த சொல் மட்டும்தான் பொறிக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம் தமிழ் சமூகத்துக்கு நல்ல வரவு மட்டுமல்ல, புதிய சாதனையை, வெற்றியை உருவாக்கித் தரப்போகிறது.


ஒரு திரைப்படத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் உழைப்பு உள்ளது. அனைவருக்கும் பாராட்டுகள். அகதிகள் சந்திக்கும் பிரச்னை தான் இந்தப் படத்தின் மையக்கரு. அவர்கள் சந்திக்கும் துயரங்கள் கொஞ்ச நஞ்சம் கிடையாது. கடலினிலே செத்துப் போகிறார்கள். எங்கயோ ஒரு இடத்தில் பிணமாகக் கிடக்கிறார்கள். சுட்டுத் தள்ளப்படுகிறார்கள். மனிதன் என்பதற்கான அர்த்தத்தை மாற்றி, இன்றைய முரண்பட்ட சமூகம் , போர், பொருளாதார நெருக்கடிகள், நாட்டை விட்டு ஓடக்கூடிய நிலை என மிக மோசமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 


விஜய் சேதுபதி, இயக்குநருக்கு பாராட்டு


இந்த நெருக்கடிகளைப் பற்றி யோசிக்காமல் ஒரு உணர்வற்ற சமூகம் உள்ளது. இது யாருக்காவது தெரியுமா, இதை பற்றி யாராவது கவலைப்படுகிறோமா என்பது தான் இப்படத்தின் கதை. இசையை இணைப்பாகக் கொண்டு, இசை மூலம் இந்த உணர்வை மேலே கொண்டு வந்திருக்கிறார்கள்.


தமிழில் தோன்றிய புதிய சிந்தனைகளில் இதுவும் ஒன்று. இயக்குநர் ரோஹாந்த் எங்கள் பொதுவுடமை இயக்கத்தில் மடியில் தோன்றியவர். என்னைப் போன்றவர்கள் வளர்வது காரணமாக இருந்தவர் அவருடைய தந்தை காந்தி என்பவர். அந்த மகிழ்ச்சி எங்களுக்கு உள்ளது.


விஜய் சேதுபதியின் தீவிர ரசிகர்களின் ஒருவன் நான். அவரது இயல்பான குணம், பொறுமை, அதனுள் உள்ள வேகம் இவற்றை அவரது நடிப்புக் கலையில் பார்த்துள்ளேன். அவருக்கு என் பாராட்டுகள். தமிழ்நாட்டில் இருந்து அகதிகளாக நம் மக்கள் குடியேறி 200 ஆண்டுகளாகி உள்ளது. இந்தப் படத்தை 200 ஆவது ஆண்டின் நினைவாக நான் பார்க்கிறேன். நல்லக்கண்ணு இந்த முயற்சி மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ளார்.


பொதுஜன வாக்கெடுப்பு ஒன்று தான் ஈழத்தமிழர்கள், இலங்கைத் தமிழர்களின் பிரச்னைக்கு தீர்வாகும், தாங்கள் எப்படி வாழவேண்டும், வாழக்கூடாது என முடிவு செய்ய வேண்டியது அவர்கள் தான். வேறு யாரும் கிடையாது” எனப் பேசியுள்ளார்.


'யாதும் ஊரே யாவரும் கேளிர்' திரைப்படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், திரைப்படம் மே 19 (நாளை) அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.