செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளராக இருந்து வந்த சிவசங்கர் பாபா அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கு கடந்த 13 ஆம் தேதி சென்னை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. முன்னாள் மாணவிகள் பலர் புகார் அளித்த நிலையில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு டெல்லியில் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.



செங்கல்பட்டு மாவட்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்ட சிவசங்கர் பாபாவிற்கு திடீரென்று உடல்நிலை குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து சிவசங்கர் பாபா தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்து வந்த சிவசங்கர் பாபா சிகிச்சையில் இருந்து நலம் பெற்ற பிறகு சிவசங்கர் பாபாவை புழல் சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து சிவசங்கர் பாபாவை 3 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிவசங்கர் பாபாவிடம் இருந்து பல திடுக்கிடும் வாக்குமூலங்களை சிபிசிஐடி போலீசார் பெற்றிருந்தனர்.



இந்நிலையில் சிவசங்கர் பாபா மூன்று மாணவிகள் கொடுக்கப்பட்ட புகார்களை போக்சோ வழக்காக பதிவு செய்வதற்காக சட்ட வல்லுநர்களுடன் சிபிசிஐடி ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து சிவசங்கர் பாபா அளித்த வாக்குமூலம் மற்றும் சட்ட வல்லுனர்களின் பரிந்துரையின் அடிப்படையில் சிவசங்கர் பாபாவின் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது போக்சோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8 முன்னாள் மாணவிகள் புகார் அளித்துள்ள நிலையில், 3 போக்சோ வழக்கு போடப்பட்டு தற்பொழுது சென்னை நீதிமன்ற சிறை காவலில் சிவசங்கர் பாபா இருந்துவருகிறார்.


 

அதேபோல் சிவசங்கர் பாபாவிற்கு உறுதுணையாக இருந்த பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர் . இதில்  முன்னாள் மாணவி மற்றும் பள்ளியில் ஆசிரியரான சுஸ்மிதா என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி இருந்தது. இதனையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தனர். இந்நிலையில் சென்னை சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபாவின் வழக்கில் பல்வேறு ஆதாரங்களைத் திரட்டுவதற்காக பள்ளியில் இருக்கும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்திருந்தனர்.

 



இதனைத்தொடர்ந்து முதற்கட்டமாக மூன்று ஆசிரியர்கள் உட்பட ஐந்து நபர்களுக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி  அவர்கள் வீட்டிற்கு சென்ற பொழுது, அவர்களின் வீடுகள் பூட்டப்பட்டிருந்தது கண்டு சிபிசிஐடி போலீசார் அவர்கள் வீட்டின் கதவுகளில் சம்மன் குறித்த அறிக்கையை ஒட்டி விட்டு சென்றுள்ளனர். சம்மன் அனுப்பி விசாரணைக்கு வரவழைப்பது என்பது சாதாரண விஷயமாக உள்ளது .ஆனால் இதற்கு சிவசங்கர் பாபாவின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட ஐந்து நபர்கள் தலைமறைவாகி இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் தலைமறைவான அவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்மன் அனுப்பிய பிறகு ஆஜராக வில்லை என்றால் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்  5 நபர்களும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.