சிவகங்கை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு இல்லை, தொழிற்சாலைகள் அதிகளவு இயக்கவேண்டும், கைவிடப்பட்ட கிராபைட் நிறுவனத்தை  செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை இருந்து வருகிறது. இந்நிலையில் சொந்தமா தொழில் தொடங்க வேண்டும் என பலரும் நினைத்து வரும் சூழலில், பாண்டிச்சேரியை சேர்ந்த நபரை கூட்டு சேர்ந்துக் கொண்டு சட்ட விரோதமாக போலி மதுபான ஆலையை இயக்கி வந்துள்ளனர். இந்நிலையில் மது தயாரித்த நபர்கள் டி.ஐ.ஜி தனிப்படை நுண்ணறிவு போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளனர்.








 

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகேவுள்ள அம்மன்பட்டி கிராமத்தில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான தோப்பு வீட்டில் போலி மதுபானம் தயாரிக்கப்படுவதாக மதுரை டி.ஐ.ஜி தனிப்படை நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து  தனிப்படை போலீசார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ராஜேந்திரனின் உதவியுடன் பாண்டிச்சேரியை சேர்ந்த ராம்குமார் என்கிற ரெட்டி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து ஆகியோர் போலி மதுபானம் தயாரிப்பில் ஈடுபட்டுவந்தது உறுதியானது.

 




 

இதையடுத்து, மூவரையும் காவல்துறையினர் கைது செய்ததுடன் மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய எந்திரம், 2 ஆயிரம் காலி மதுபாட்டில்கள் மற்றும் பிரபல மதுபான பெயர்கொண்ட போலி ஸ்டிக்கர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். போலி மதுபான ஆலை நுண்ணறிவு போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.