திருப்பத்தூரில் சிவசங்கராக வளர்ந்த சிவசங்கர் பாபா


”உனக்கு வந்த சங்கடங்களும் சலிப்புகளும் வேறு யார் வாழ்க்கையிலாவது வந்திருக்கும் என்றால் அவர்கள் மண்ணோடு மண்ணாகி அவர்களின் சமாதியில் புல் முளைத்திருக்கும் என தன்னை பற்றி விஸ்வாமித்திரர் கூறினார்...” - சிவசங்கர் பாபாவே தனது சீடர்கள் முன் உதிர்த்த வார்த்தைகள்தான் இவை.


 


’கலியுகத்துல நான் 'பாபா''வா ஆக நா ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கண்னு’’ அடிக்கடி சொல்லிக் கொள்ளும் சிவசங்கர் பாபா திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியில் புரோஹிதர் நாராயண சர்மா-விஜயலட்சுமி தம்பதிக்கு 1949-ஆம் ஆண்டு மகனாக பிறந்தவர். பெற்றோர் இவருக்கு சிவசங்கர் என பெயர் வைத்த நிலையில், வாணியம்பாடியில் உள்ள கல்லூரியில் இளங்கலை பட்டமும், பின்னர் லாஜிஸ்டிக்ஸ் படிப்பையும் படித்து முடித்துவிட்டு சென்னையில் டிரான்ஸ்போர்ட் தொழிலில் வேலை பார்க்கத் தொடங்கினார் சிவசங்கர்.


சிறுவயதிலேயே சாமியார்கள் உடன் தொடர்பு



சிறுவயதில் இருந்தே ஆன்மீக வழிபாடுகளில் சிவசங்கருக்கு அதிக நாட்டம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், காஞ்சி பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள், ஜெயேந்திரர், ரத்னகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் உள்ளிட்ட பல்வேறு சாமியார்களை சந்திப்பதும், அவர்களிடம் இருந்து அருளாசி பெறுவதையுமே சிவசங்கர் வழக்கமாக கொண்டிருந்தார். சாமியார் ஒருவர் கூறியதால் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு சரக்கு போக்குவரத்து தொழிலை தொடங்கிய சிவசங்கர், பின்னர் பார்சல் சர்வீஸ், லாரி சர்வீஸ், பங்குசந்தை முதலீடு என தனது தொழிலை விரிவுபடுத்தி அண்ணா நகரில் வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.


ராகவேந்திரா அவதாரம் எடுத்த தொழிலதிபர்



14 ஆண்டுகள் தமிழ்நாடு கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அஷோசேஷனின் தலைவராகவும் இருந்த சிவசங்கருக்கு1984-ஆம் ஆண்டில் ஏற்பட்ட தொழில் நட்டத்தால் தனது லாரி, பஸ் உள்ளிட்ட சொத்துகளை விற்கும் நிலை ஏற்பட்டது. இதனால் கடவுளை தேடி கோயில் கோயிலாக செல்லத் தொடங்கியதாக சிவசங்கரே ஒரு வீடியோவில் கூறி உள்ளார்.  ஆன்மீக நிகழ்வுகளில் சொற்பொழிவாற்ற தொடங்கிய சிவசங்கர், நாளடைவில் ராகவேந்திரா சுவாமிகள் தனக்குள் இருப்பதாகவும் தாம்தான் ராகவேந்திரா எனவும் கூறத் தொடங்கினார். சிவசங்கர் என்ற பெயருடன் பாபாவை அட்டாச் செய்து ’சிவசங்கர் பாபா’’வாகவும் புதிய அவதாரம் எடுத்தார். காலப்போக்கில் கிருஷ்ணர்,முருகர், ஜீசஸ் உள்ளிட்ட எல்லா கடவுள்களும் நான்தான் எனக்கூறி கொள்ளும் அளவிற்கு இவரின் ஆன்மீகம் அப்டேட் ஆனது


ஆடம்பர ஆசிரமும் பாலியல் தொல்லையும்


கேளம்பாக்கத்தில் தனது சீடர் ஒருவர் அளித்த மூன்று ஏக்கர் நிலத்தைக் கொண்டு சுஷில் ஹரி இண்டர்நேஷ்னல் என்ற பெயரில் கல்வி நிறுவனங்களை தொடங்கிய சிவசங்கர் பாபா, நாளடைவில் அப்பகுதியை 63 ஏக்கராக விரிவு படுத்தினார். குழந்தைகளிடம் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தொடர் புகார்கள் சிவசங்கர் பாபா மீது எழுந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் அவர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து டேராடூனில் பதுங்கி இருந்ததாக கூறப்பட்டு வந்த சிவசங்கர் பாபாவை டெல்லி காசியாபாத் பகுதியில் கைது செய்துள்ளனர்.



போன மாசம் சாவ வேண்டிய, தனக்கு இன்னும் நாலு வருசம் ஆயுளை கடவுள் நீட்டித்துள்ளதாக தனது சீடர்களிடம் கூறிவந்த சிவசங்கர் பாபாவிற்கு, தான் கைது செய்யப்படுவோம் என்ற தகவலையும் கடவுள் ஏன்? சொல்லாமல் விட்டுவிட்டார் என்பதே பாபாவின் பரமசீடர்களின் மனதில் எழும் கேள்வியாக உள்ளது