செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே புதுபாக்கம் பகுதியில் அமைந்துள்ள சுஷில் ஹரி பள்ளி முன்னாள் மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா கைது செய்து செங்கல்பட்டு நீதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு தீடீர் என்று உடல்நிலை பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற பின்னர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிவசங்கர் பாபாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். நேற்று விசாரணைக்கு வந்ததைத் தொடர்ந்து 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.
நேற்று சிபிசிஐடி போலீசார் சென்னை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று இரண்டு வாகனத்தில் சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்தன் தலைமையில் மூன்று பெண் அதிகாரி உள்பட 10 பேர் கொண்ட குழுவினர்.
பள்ளி மாணவிகள் 5 பேர் அளித்த புகாரின் அடிப்படையில் , சிவசங்கர் பாபா தனது LOUNGE என்ற சொகுசு அறையில் வைத்து தான் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் அந்த இடத்திலிருந்து பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். இதனைத்தொடர்ந்து சிவசங்கர் பாபா அங்கு வைத்து விசாரிக்க முடிவு செய்த சிபிசிஐடி போலீசார், இன்று சிவசங்கர் பாபாவை பள்ளிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
ஆபாச மெசேஜ்கள் அனுப்பியது, மாணவிகளுடன் நெருக்கமான புகைப்படங்களை வைத்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் சிவசங்கர் பாபா பயன்படுத்திய கணினி லேப்டாப் மொபைல் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு அதை பயன்படுத்த தூண்டுதலாக இருந்த கணினி ஆசிரியர்கள் இருவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் சம்பந்தமாக மூன்று பெண்கள் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா அவருக்கு உடந்தையாக இருந்த பாரதி, தீபா உள்ளிட்ட 3 ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டம் வழக்கு பதியப்பட்டுள்ளது. அதில் ஒரு பெண் ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பாபா வருவார் என்று எதிர்பார்த்து, காலை முதல் காத்திருந்த அதே பகுதியில் வசிக்கும் பாபா ஆதரவாளர்கள் 100 க்கும் மேற்பட்டோர் விசாரணை முடித்து செல்லும் போது " பாபா பாபா" என்று கூச்சலிட்டு பாப்பா போல கதறி அழுதனர். ‛சரி போப்பா.. போப்பா...’ என்பதை போல அவர்களை பார்த்து அங்கிருந்து போலீசாருடன் சென்றார் பாபா. சில பெண்கள் கண்ணீர் விட்டு அழுதுதது மட்டுமின்றி, ‛அவர் நல்ல மனுஷன் பா... பாபா நல்ல மனுஷன் பா ஒழுக்கம் என்றால் என்னான்னு சொல்லி கொடுப்பாருப்பாரு...’ என கண்ணீருடன் போலீசாருக்கு வாய் சான்றிதழ் அளித்தனர்.
போலீசார் வழக்கம் போல அது எதையும் கண்டுகொள்ளாமல் தங்கள் பணியை முடித்துச் சென்றனர். மூன்று நாள் காவலில் எடுத்த சிபிசிஐடி போலீசார் நாளை 30 ஆம் தேதி மாலைக்குள் சிவசங்கர் பாபா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்க உள்ளனர். எனவே அவரை விசாரிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே அவகாசம் இருப்பதால் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.