குழந்தை தொழிலாளர்கள் அதிகம் இருக்கும் மாவட்டங்களில் ஒன்றாக திருவண்ணாமலை மாவட்டம் உள்ளது. பெற்றோர்களின் அறியாமை, பெற்றோரின் பேராசை, குடும்பத்தின் வறுமை, முதலாளியின் மனிதநேயமின்மை மற்றும் பெற்றோரின் தியாக மனப்பான்மை அற்ற செயல் ஆகிய காரணங்களால் அதிகப்படியான குழந்தைகள் கல்வியை தொடர முடியாமல் தொழிலாளர்களாக செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வசிக்கின்றனர். கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொது முடக்கத்தால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், வறுமையில் இருக்கும் குடும்பங்களில் வசிக்கும் குழந்தைகளை கண்டறிந்து, மாணவ, மாணவிகளை வெளி மாவட்டங்களுக்கு வேலைக்கு அனுப்பும் வேலையை சில இடைத்தரகர்கள் செய்து வருகின்றனர்.

  


இதற்காக சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் இருந்து  ஏராளமான இடைத்தரகர்கள் அடிக்கடி ஜவ்வாதுமலைக்கு வருகின்றனர் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த இடைத்தரகர்கள், வறுமையில் வாடும் பெற்றோரை கண்டறிந்து அவர்களுக்கு பண ஆசை காட்டி குறிப்பிட்ட தொகையை கொடுத்து 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை பருத்தித்தோட்டம், மரவள்ளிக்கிழங்கு பிடுங்குதல், கடைகள் மற்றும் பனியன் கம்பெனிகளுக்கு குழந்தை தொழிலாளர்களாக அனுப்பி வைப்பதாகத் தெரியவந்துள்ளது.


 



 


ஜவ்வாதுமலை கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுக்கு உட்பட்ட 4 சிறுவர்களை கணவன், மனைவி உள்பட 4 இடைத்தரகர்கள் கடத்தி செல்வதாகவும் அதே பகுதியைச் சேர்ந்த 3 பெண் குழந்தைகளை ஈரோடு அருகில் உள்ள தனியார் பனியன் கம்பெனிக்கு கடத்தி செல்வதாகவும் புகார்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்றன. அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சைல்டு லைன் அமைப்பினர் ஜமுனாமரத்தூருக்கு விரைந்தனர். அவர்கள் பேருந்து நிலையத்தில் சோதனை நடத்தியபோது 7 குழந்தை தொழிலாளர்களுடன் நின்றிருந்த தம்பதி உள்பட 4 இடைத்தரகர்களை அவர்கள் மடக்கிப்பிடித்து, ஜமுனாமரத்தூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.



காவல்துறையினர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் திருப்பத்தூர் மாவட்டம் வெங்கலாபுரத்தைச் சேர்ந்த ஹரி (46), அவரின் மனைவி கற்பகம் வயது (32), சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி (41), பெரம்பலூர் மாவட்டம் பாதாங்கி கிராமத்தைச் சேர்ந்த அழகுவேல் (40) ஆகியோர் என்பதும் இவர்கள் சிறுவர்களை கடத்தி சென்று குழந்தை தொழிலாளர்களாக பருத்தித்தோட்டம், பனியன் கம்பெனி ஆகியவற்றில் வேலைக்குச் சேர்க்கும் இடைத்தரகர்களாக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.


இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். கடத்தப்பட்ட 7 குழந்தைகளை மீட்டு காவல்துறையினர் மற்றும் சைல்டு லைன் அமைப்பினர் அவர்களின் பெற்றோரிடம் சிறுவர்களை ஒப்படைத்தனர்.