Shocking Video: மத்திய பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.  இங்கு சட்டசபையின் ஐந்து ஆண்டு காலம் முடிவடைந்த நிலையில், மத்திய பிரதேசத்தில்  கடந்த 17ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. 230 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் இடையே நேரடியாக போட்டி நிலவி வருகிறது. கடந்த 17ஆம் தேதி சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. மொத்தம் 71.16 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. 


பகீர் வீடியோ:


இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் சினிமாவை  மிஞ்சும் வகையில், இளம்பெண் பட்டப்பகலில் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அந்த வீடியோவில், பெட்ரோல் பங்க் ஒன்றில் 19 வயது இளம்பெண் நின்றுக் கொண்டிருந்தார். அப்போது,  இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் வந்தனர்.


பைக்கை ஓட்டி வந்த நபர் ஹெல்மெட் அணிந்தபடியும், மற்றொரு நபர் முகத்தை கைக்குட்டையால் மறைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் இருந்தனர். அப்போது, பைக்கில் பின்பக்கம் அமர்ந்திருந்த நபர், பைக்கில் இறங்கி, பெட்ரோல் பங்கில் நின்றுக் கொண்டிருந்த பெண்ணை தரதரவன இழுத்து, பைக்கில் தூக்கி வைத்து கடத்தி செல்கின்றனர்.






இதனை நேரில் பார்த்துக்  கொண்டு, அங்கு இருக்கும் மக்கள் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர். தடுப்பதற்கான எந்த முயற்சியிலும் அங்கிருந்த மக்கள் ஈடுபடவில்லை. இச்சம்பவம் திங்கள்கிழமை காலை 9:30 மணியளவில் மாவட்டத்தில் ஜான்சி சாலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெட்ரோல் பம்ப் அருகே நடந்ததுள்ளது. 


ஹோட்டலில் மீட்கப்பட்ட பெண்


இது சம்பந்தமான காட்சிகள் இணையத்தில்  வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கடத்தப்பட்ட இளம்பெண் மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 


மேலும், தனது சகோதரருக்காக காத்திருந்த போது தான் இளம்பெண்ணை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்தி சென்று இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று காலை ஒரு ஹோட்டலில் அந்த பெண்ணை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும், இருசக்கர வானத்தில் இருந்த ஒருவரை மட்டும் பிடித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அந்த பெண்ணை எதற்காக கடத்தினார்கள்? இவர்களுக்கும் அந்த பெண்ணுக்கும் எந்த தொடர்பு என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.