கேரள மாநிலம் திரிச்சூரில் உள்ள பள்ளி ஒன்றில் முன்னாள் மாணவர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம் திரிச்சூர் நாய்க்கானல் பகுதியில் விவேகோதயம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று அங்கு வந்த முன்னாள் மாணவர் ஒருவர் தனது பள்ளி வகுப்பறைக்கு சென்று திடீரென துப்பாக்கியை எடுத்து மேல் நோக்கி சுட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது முலாயம் பகுதியை சேர்ந்த ஜகன் என தெரிய வந்துள்ளது.
ஜகன் மீது ஏற்கனவே படித்த பள்ளியில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு விவேகோதயம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த பள்ளியில் அவர் ஓராண்டு காலம் படித்திருந்தாலும் முழு ஆண்டு தேர்வு எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை 10 மணி அளவில் அவர் பள்ளி வளாகத்தில் புகுந்து பள்ளி முதல்வர் அரைக்கு சென்றுள்ளார். அதன் பின் வகுப்பறைக்குள் சென்று தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மூன்று சுட்டுள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து வந்த போலீசார் அந்த முன்னாள் மாணவரை பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். பிடிபட்ட நபர் போதையில் இருந்தது தெரியவந்துள்ளது. அங்கு உயிர்சேதம் ஏதும் நல்வாய்ப்பாக ஏற்படவில்லை. பள்ளியில் இரண்டு ஆசிரியர்களை பற்றி விசாரித்தப்பின் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படிக்கும்போது தன்னிடம் இருந்து பறிமுதல் செய்த தொப்பியை திருப்பி தருமாறு கோரியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய ஆசிரியர் ஒருவ்ர், “ காலை 10 மணி அளவில் ஒருவர் முதல்வர் அறைக்கு வந்தார், முதலில் அதனை யாரும் பெரிதாக பொருட்படுத்தவில்லை. பின் அந்த நபர் அருகில் இருக்கும் சைக்கிள் ஸ்டாண்டிற்கு சென்று அங்கு இருக்கும் சைக்கிள்களை எட்டி உதைத்தார். பின்னர் அந்த நபர் தனது கையில் இருக்கும் துப்பாக்கியை காட்டி ஆசிரியர்களை மிரட்டி வந்தார். அதனை தொடர்ந்து அவர் அருகில் இருக்கும் வகுப்பறைக்கு சென்று மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தினார். உயிர் சேதம் எதுவும் இல்லை என்றாலும், அந்த நபர் கடும் கோபத்தில் இருந்தார்” என தெரிவித்தார். மேலும், ஜகன் பள்ளியில் படிக்கும் போது கூட வகுப்பிற்கு சரியாக வந்ததில்லை என குறிப்பிட்டார்.
பள்ளியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அவர் ஏன் பள்ளியில் வந்து துப்பாக்கிச்சூடு நடத்தினார், அவருக்கு எப்படி துப்பாக்கி கிடைத்து, போதையில் செய்தாரா? உள்நோக்கத்தோடு வந்து துப்பாக்கிச்சூடு நடத்தினாரா என்பது குறித்து போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.