கேரளாவைச் சேர்ந்த 52 வயது ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த கொடூரம் நடந்துள்ளது.கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலிபரம்பா பகுதியைச் சேர்ந்தவர் ஃபைசல். இவர் தனது பள்ளியில் படித்த 5, 6 மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவிகளை தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 5 மாணவிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இன்னும் அதிகமான மாணவிகளும் தாமாக முன்வந்து புகார் அளித்து வருகின்றனர். 






ஒவ்வொரு நாளும் 350 குழந்தைகள்!


தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்களின்படி, நாட்டில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 350 குழந்தைகள் பாலியல் வன்முறை உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். 2019 ஆம் ஆண்டில் மட்டும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் 1,48,185 வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் மட்டுமே கடந்த 5 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250% அதிகரித்திருப்பது தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
குழந்தைகளுக்கு பள்ளியிலேயே பாலியல் வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய அரசு இருக்கின்றது.


போக்ஸோ சட்டம் என்றால் என்ன?


போக்ஸோ சட்டத்தின்படி குழந்தைகளிடம் பாலியல் ரீதியான செய்கைகள் காட்டுவது, தொலைபேசி, அலைபேசியில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது, பாலியல் உறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம். பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற கடந்த 2012ல் உருவான சட்டமே போஸோ சட்டம் (Protection of Children from Sexual Offence). சட்டம் இருந்தாலும் கூட இச்சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கின்றன.


இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் பதிவான குற்றங்களின் சதவீதம் 35.3. அதில் உத்தர பிரதேசத்தில் 30, மத்திய பிரதேசத்தில் 18, ஹரியானா, கர்நாடகாவில் தலா 11, தமிழ்நாட்டில் 8, மகாராஷ்டிரா, தெலங்கானா, மேற்கு வங்கத்தில் தலா 6 சிறார் பாலியல் வல்லுறவு கொலை வழக்குகள் பதிவானதாக கூறப்பட்டுள்ளது. பெற்றோர், ஆசிரியர்கள் குழந்தைகள் தங்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை தங்களிடம் சொல்லும் அளவுக்கு நம்பிக்கைக்குரியவர்களாக மாற வேண்டும். போக்ஸோ நீதிமன்றங்கள் வழக்குகளில் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும். இவையெல்லாம் நடக்கும் பட்சத்தில் குற்றங்களும் குறையும்.