புதுச்சேரி: புதுச்சேரியில் போலி செயலியில் கடன் பெற்று இதுவரை 400க்கும் மேற்பட்டோர் ரூ.2 கோடிக்கு மேல் இழந்துள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement

இதுகுறித்து சைபர்கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.,

சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றில் உடனடி கடன் தருவதாக பல விளம்பரங்கள் வருகிறது. அதை நம்பி, கடன் பெறுவதற்கான செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்து கடன் பெற்றால், சைபர் மோசடி கும்பல், செயலி மூலம் உங்களுடைய புகைப்படம் மற்றும் மொபைல் எண்களை திருடி விடுகின்றனர்.

Continues below advertisement

பின், தவணை தொகை செலுத்தும் தேதிக்கு முன், தங்களை மர்மநபர்கள் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு, கடன் பெற்ற தொகையை விட அதிக தொகையை இன்றே கட்ட வேண்டும் என மிரட்டுகின்றனர். அப்படி, கட்டவில்லை என்றால் உங்களுடைய புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டல் விடுகின்றனர்.

வாட்ஸ் அப் மூலம் மிரட்டல்

இதுபோன்று புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் 400க்கும் மேற்பட்டோர் ரூ. 2 கோடிக்கு மேல் இழந்துள்ளதாக புகார் அளித்துள்ளனர். விசாரணையில் சைபர் மோசடி கும்பல் பாகிஸ்தான், சீனா, கம்போடியா போன்ற நாடுகளில் இருந்து வாட்ஸ் ஆப் மூலம் மிரட்டுவது தெரிய வந்ததுள்ளது.

ஆகையால் பொதுமக்கள் உடனடி கடன் செயலி மூலம் கடன் பெற வேண்டாம். அடையாளம் தெரியாத நபர்கள் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டால், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் வரும் போலியான உடனடி கடன் செயலி விளம்பரங்களை நம்பி பதிவிறக்கம் செய்ய வேண்டாம். கடன் பெற வேண்டாம். சைபர் கிரைம் சம்பந்தமான புகார் அளிக்க 1930, 0413 2276144, 9489205246 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரி சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை,

ஆன்லைனில் வரும் விளம்பரத்தை நம்பி யாரும் மொபைல் ஆப்களில் முதலீடு செய்து பணத்தை ஏமாற வேண்டாம். பெரும்பாலும் இது போன்ற மோசடி ஆப்கள் வெளிநாட்டில் இருந்து இயக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இதுபோன்ற பல்வேறு ஆப்களில் மக்கள் முதலீடு செய்து பல கோடி ரூபாய் இழந்து வருவது தெரிவித்தும், அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு மக்கள் மீண்டும் மீண்டும் பணத்தை முதலீடு செய்து இழந்து வருவது தொடர்கதையாக உள்ளது. ஆகவே, மொபைல் ஆப்கள் மூலம் ஆன்லைன் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்றார்.

வங்கி OTP எண் சொல்லாதீங்க

மேலும் வங்கி கணக்கு எண், ஓடிபி எண் போன்றவற்றையும் தெரிவிக்கக்கூடாது. மோசடி நடந்த உடன் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் மோசடியாக எடுக்கப்பட்ட பணத்தை முடக்க இயலும். மீட்கவும் இயலும். மேலும் ஆன்லைன் ஜாப், டாஸ்க் என்று பணம் கட்டும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது.

இதேபோல் ஆன்லைன் டிரேடிங் ஆப் என்று பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது. இதில் எந்த வகையிலும் மக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படுகிறது.