ஆபாசப் பட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பிரபல தொழிலதிபரும் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ரா. இந்நிலையில், அவரை விசாரணைக்காக சிறையிலிருந்து ஜுஹூ பங்களாவுக்கு போலீஸார் அழைத்துவர அவருடன் ஷில்பா ஷெட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், போலீஸார் ஷில்பாவிடம் வாக்குமூலம் பதிவு செய்தபோது அவர் ஓவென அழுதுள்ளார் என கூறப்படுகிறது.

Continues below advertisement


போர்னோ படங்களும்.. பலான அப்ளிகேஷனும்..


ஷில்பா ஷெட்டி ஒரு சிறந்த நடிகை, யோகா நிபுணர். அவரது கணவர் ராஜ் குந்த்ரா தொழிலதிபர். திரைப்படத் தயாரிப்பாளர். இதுதான் நமக்குத் தெரிந்த கதையாக இருந்தது. ஆனால், இளம் பெண் ஒருவர் கொடுத்த புகாரை விசாரிக்க அது கிணறு வெட்ட பூதம் தோன்றிய கதை போல ராஜ்குந்த்ரா கைது வரை வந்துவிட்டுள்ளது. வியான் இண்டஸ்ட்ரீஸ் (Viaan industries) என்ற பெயரில் ராஜ்குந்த்ரா சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மும்பை அந்தேரியில் உள்ளது.




இந்த நிறுவனத்தின் மூலம் படவாய்ப்பு தேடி வரும் இளம் பெண்களை சினிமாவில் நடிக்க வைப்பதாக ஒப்பந்தம் செய்து பின்னர் அரை நிர்வாணம், முழு நிர்வாணமாக ஆபாசப் படங்களில் நடிக்க வைத்துள்ளனர் என்பதே புகார். குந்த்ரா நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களும் நடிகரும் தயாரிப்பாளர்களுமான கெஹான் வசிஷ்ட், உமேஷ் காமத் மீது இளம் பெண் ஒருவர் தன்னை வலுக்கட்டாயமாக ஆபாசப் படத்தில் நடிக்க வைப்பதாக புகார் கூறினார். இந்தப் புகாரை போலீஸார் விசாரிக்க ஆரம்பித்தபோது இதில் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிந்தது.


உடனே போலீஸார் ராஜ் குந்த்ராவிற்கு மத், மல்வானி பகுதிகளில் உள்ள வீடுகளில் அதிரடி ரெய்டு நடத்தினர். அப்போது,  அங்கே ஆபாசப் படம் எடுப்பது உறுதியானது. இதனையடுத்து போலீஸார் ராஜ் குந்த்ராவைக் கைது செய்தனர். ஆபாசப் படங்களை பிரிட்டனுக்கு அனுப்பி அங்கிருந்து ஹாட்ஷாட்ஸ் என்ற செயலியில் பதிவேற்றம் செய்ததும் புலன் விசாரணையில் தெரியவந்தது.


ஆனால், தன் கணவர் ஆபாசப் படம் எடுக்கவில்லை வயது வந்தோருக்கான அடல்ட் கன்டன்ட் கொண்ட படங்களைத் தான் தயாரித்தார் என்று ஷில்பா ஷெட்டி வக்காலத்து வாங்கினார். இதற்கிடையில் ராஜ்குந்த்ராவின் போர்ன் படங்கள் ஆதரவு பழைய ட்வீட்டை தோண்டியெடுத்த நெட்டிசன்கள் அதை வைத்து விமர்சனங்களை முன்வைத்தனர். இந்நிலையில், ராஜ் குந்த்ரா போலீஸ் காவலில் எடுக்கப்பட்டார். விசாரணைக்காக மும்பை ஜுஹூவில் உள்ள வீட்டுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.


ரகசிய அலமாரி, வாக்குவாதம், அழுகை.. 


ராஜ்குந்த்ராவை போலீஸார் வீட்டுக்கு அழைத்துச் சென்றபோது அவரைப் பார்த்ததுமே ஷில்பா ஷெட்டி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக போலீஸார் கூறுகின்றனர். மேலும், வீட்டில் சோதனை செய்தபோது ஒரு ரகசிய அலமாரியில் சில முக்கிய ஆவணங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த ஆவணங்களைப் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். பின்னர் ஷில்பா ஷெட்டியிடம் போலீஸார் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். அப்போது அவர் உடைந்து அழுதுள்ளார். மேலும், தனக்கு தனியாக தொழில் இருந்ததால் தான் அதில் கவனம் செலுத்தியதாகவும் கணவர் என்ன செய்தார் என்று தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.