Crime: திரிபுராவில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திரிபுரா மாநிலம் உனோகோட்டி மாவட்டம் குமார்ஹட் பகுதியில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர் புகார் ஒன்று அளித்தனர்.


அதில் கூறப்பட்டிருப்பதாவது, 


”தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு பெண். தனது மகளை கடந்த 19-ஆம் தேதி உனோகோட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தன் மகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்த விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தலைமறைவாக உள்ளவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


மேலும், சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் மாநில பாஜக அமைச்சரின் மகனுக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மாணிக் சாஹாவிடம் உரிய விளக்கம் கேட்போம் என காங்கிரஸ் எம்எல்ஏ ஆசிஷ் சாஹா தெரிவித்துள்ளார்.


இதைபோன்று பெண்கள் எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் கூட, டெல்லியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் கழிவறைக்குள் 11 வயது மாணவியை இரண்டு சீனியர் மாணவர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது. இதையடுத்து, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை விவரித்த விசாரணை ஆணையம்,  "ஜூலை மாதம் தனது வகுப்பறைக்கு சென்று கொண்டிருந்தபோது, ​​தனது பள்ளியில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்கள் மீது சிறுமி தெரியாமல் மோதியுள்ளார். அவர் அம்மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டதாகவும், ஆனால் அவர்கள் தன்னை துன்புறுத்த ஆரம்பித்ததாகவும், கழிவறைக்குள் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி கூறினார்.  


மாணவர்கள், கழிவறை கதவை உள்ளே இருந்து பூட்டிவிட்டு தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் குற்றம் சாட்டினார். இந்த சம்பவத்தை ஆசிரியை ஒருவரிடம் தெரிவித்தபோது, ​​”மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறியதாகவும், விஷயம் மூடிமறைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் எதுவும் வரவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்” என்பது குறிப்பிடத்தக்கது.