திருவாரூரில் பெண் காவலருக்கு லிப்ட் கொடுத்து உதவுவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்த ஆயுதப்படை காவலர் சற்குணம் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் 22 வயதுடைய பெண் காவலர் ஒருவர் பணியாற்றி வருகிறார். 2 நாட்களுக்கு முன் அந்த பெண் காவலர் பணி நிமித்தம் காரணமாக தஞ்சாவூருக்குச் சென்றுவிட்டு இரவு பேருந்தில் திருவாரூருக்கு திரும்பிக்கொண்டு இருந்துள்ளார்.

பேருந்தில் வந்து கொண்டு இருந்த பெண் காவலுருக்கு அவருடன் ஆயுதப்படையில் பணிபுரியும் சற்குணம் (32)என்ற காவலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, சற்குணம் அந்த பெண் காவலரிடம் நீங்கள் கொடச்சேரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி விடுங்கள், நான் அருகில் தான் இருக்கிறேன், எனது இரு சக்கர வாகனத்தில் உங்களை பத்திரமாக நீங்கள் தங்கியுள்ள இடத்திற்கு கொண்டு சேர்த்து விடுகிறேன் என கூறியுள்ளார். இதனை நம்பிய பெண் காவலரும் நம்முடன் பணி புரிபவர்தானே என நம்பி கொரடாச்சேரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். 

அங்கிருந்து ஆயுதப்படைக் காவலர் சற்குணத்துடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். கொரடாச்சேரியில் இருந்து சிறிது தொலைவில் உள்ள தண்டலை கிராமம் அருகே சென்றபோது பெண் காவலரிடம் பாலியல் ரீதியாக சற்குணம் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த அந்த பெண் காவலர் சற்குணத்திடம் இருந்து தப்பித்துள்ளார். அதன் பின்னர் தன்னுடன் பணியாற்றும் மற்றொரு காவலரை தொலைபேசியில் தொடர்புகொண்டு நடந்ததை கூறியுள்ளார்.

அதன் பின்னர், இதுகுறித்து திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமாரிடம் அந்த பெண் காவலர் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆயுதப்படைக் காவலர் சற்குணத்தை பணியிடை நீக்கம் செய்து திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  சுரேஷ்குமார் உடனடியாக உத்தரவிட்டார். 

அதன் பின்னர் ஆயுதப்படை காவலர் சற்குணம் மீது கொரடாச்சேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். கொரடாச்சேரி காவல் நிலையத்தில், பதியப்பட்ட வழக்கில், ‘பெண்ணை துன்புறுத்துதல், பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தல், பெண்ணை தாக்குதல்’ உள்ளிட்ட மூன்று பிரிவுகள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து நடந்த விசாரணையில் ஆயுதப்படை காவலர் சற்குணத்தை கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கை காவல் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.