நான்கு பாதுகாவலர்களைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட மத்தியப் பிரதேச 'சீரியல் கில்லர்' சிவபிரசாத் துர்வேவை பார்த்து மற்ற கைதிகள் பயப்படுவதால், சாகர் மத்திய சிறையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த தகவலை சிறை அலுவலர் ஒருவர் பகிர்ந்துள்ளார். 






இதுகுறித்து விரிவாக விவரித்த சிறை கண்காணிப்பாளர் ராகேஷ் பாங்ரே, "குளிக்கும்போது, ​​ஜெயில் வார்டன்கள் அவர் அருகிலேயே இருப்பார்கள். சாப்பிட்டு முடித்தவுடன் அவருக்கு உணவு பரிமாறப்படும் தட்டு உடனடியாக திரும்ப எடுக்கப்படும். குற்றம் செய்வதற்கான உள்ளுணர்வை அவர் கொண்டிருக்கிறார். 


இதை கருத்தில் கொண்டு, 'சீரியல் கில்லர்' மற்ற கைதிகளுடன் வைக்கப்படவில்லை. அவர் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது நான்கு தொடர் கொலைகள் உள்பட 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஷிவ்பிரசாத் துர்வே, கிடைக்கக்கூடிய எந்தவொரு பொருளையும் ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடியவராகக் கருதப்படுவதால், அவருடன் எந்தப் பாத்திரங்களையும் வைத்துக் கொள்ள அனுமதி இல்லை.


மற்ற கைதிகள் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டதை அறிந்து பயப்படுவதால், அவர்களுடன் அவர் வைக்கப்படவில்லை. இருப்பினும், செப்டம்பர் 6 ஆம் தேதி அவர் சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து, அவரது நடத்தை சாதாரணமாக இருக்கிறது. அவரை சீர்திருத்த மத மற்றும் கல்வி புத்தகங்களை கொடுத்துள்ளோம். இதுவரை அவரது குடும்பத்தினர் யாரும் அவரை சிறையில் சந்திக்கவில்லை" என்றார்.


8-ஆம் வகுப்பு வரை படித்த சிவபிரசாத் துர்வே, மத்தியப் பிரதேசத்தின் சாகரில் மூன்று காவலர்களையும், போபாலில் மற்றொருவரையும் எந்தக் காரணமும் இல்லாமல் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். செப்டம்பர் 2-ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.






அவர் தொடர்புடைய முதல் மூன்று கொலைகளும் 72 மணி நேரத்திற்குள் சாகரில் அரங்கேறியுள்ளன. போலீசார் அவரை கைது செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் போபாலில் கடைசி கொலை நடைபெற்றுள்ளது.