மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி தாலுக்காகளை சேர்ந்த திருமுல்லைவாசல், மடவாமேடு, பூம்புகார், கொட்டாய் மேடு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க வேண்டும், இல்லை என்றால் 1983 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தில் உள்ள 21 அம்சங்களை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் மீனவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பேசிய ஆட்சியர் லலிதா சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க முடியாது என்றும், அதேநேரம் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983ல் உள்ள 21 வகையான விதிகள் முழுமையாக அமல்படுத்தபடும் எனவும், விதிமீறல்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததார். இதனை ஏற்ற சுருக்கு மடி வலை பயன்படுத்தும் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் தொடர்ந்து 5 வது நாளாக மீன் வளத்துறை மற்றும் மீன்வளத்துறை அமலாக்க பிரிவு போலீசார், வருவாய்த் துறையினர் கடலோர மீனவ கிராமங்களில் ஆய்வில் ஈடுப்பட்டுள்ளனர். இந்ந சூழலில் பூம்புகார் அருகே வானகிரி கிராமத்தில் மீன்வளத்துறை மற்றும் மீன்வளத்துறை அமலாக்க பிரிவு போலீசார், வருவாய்த் துறையினர் ஆய்வு ஈடுபட்டனர். அப்போது இரண்டு படகில் தடைசெய்யப்பட்ட வலையில் பிடிக்கப்பட்ட 300 கிலோ எடை கொண்ட மத்தி மீன்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவற்றை படகுடன் மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடந்த நான்கு தினங்களாக மீன் வளத்துறை மற்றும் மீன்வள துறை அமலாக்கப் பிரிவு போலீசாரால் நடத்தப்பட்ட ஆய்வில் இதுவரையில் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை மீறியதாக 255 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலில் மீன்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில், மீன்வளத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக கடற்கரையில் தடைசெய்த மீன்பிடி வலையான சுருக்குமடி வலை மற்றும் இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் படித்து வருகின்றனா். இதுபோன்ற அரசால் தடை செய்த வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபடும்போது, அதிக கடற்பரப்பு மீன் பிடிப்புக்கு உட்படுத்தப்படுகிறது. அத்துடன், பல்வேறு வகையான சிறு மீன்கள் உட்பட அதிக அளவில் மீன்கள் பிடிபடுவதுடன், கடலின் அடிப்பகுதியில் உள்ள இயற்கை சூழ்நிலையும் பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் மீன்களின் இனப்பெருக்கம் தடுக்கப்பட்டு, மொத்த மீன் உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. அதேபோல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்களைப் பிடிப்பதால், மீனவா்களிடையே பல்வேறு பிரச்னைகள் மற்றும் மீனவா்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், மீன்வளமும் அழிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.
இதைக் கருத்தில்கொண்டே மீனவா்கள் சுருக்கு மடி, இரட்டை மடி உள்ளிட்ட அரசால் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபடக்கூடாது என தெரிவித்துள்ளது. மேலும், மீனவா்கள் எவரேனும் தடை செய்த மீன்பிடி வலையான சுருக்கு மடி வலை, இரட்டைமடி வலைகள் வைத்திருந்தால், சம்பந்தப்பட்ட மீன்வளத் துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஒப்படைக்கத் தவறும் பட்சத்திலும், எதிா்வரும் காலங்களில் தடைசெய்த மீன்பிடி வலையான சுருக்குமடி வலை மற்றும் இரட்டைமடி வலைகளைக் கொண்டு மீன் பிடிப்பது தெரியவரும் பட்சத்திலும், தடைசெய்யப்பட்ட இந்த வலைகளை மறைமுகமாக பெரிதும் லாபம் தரும் நோக்கத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மீனவா்களுக்கு விற்பனை மற்றும் விநியோகம் செய்வோா் மீதும் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-இன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.