இந்தாண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் எண்பதாயிரம் ஹேட்டர் குறுவை சாகுபடி நடைபெற்றது. இந்நிலையில் மழையால் குறுவை சாகுபடி முற்றிலும் பாதித்து, மகசூல் முற்றிலும் குறைந்தது, அதனையடுத்து குறைந்தளவு அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் போதிய அளவு நெல் விளைச்சல் இல்லாததால் இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட தனியார் நெல் வியாபாரிகள் வெளிமாநில, வெளிமாவட்ட நெல் மூட்டைகளை குறைந்த விலைக்கு வாங்கி, சீர்காழி பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கூடுதல் லாபத்திற்கு விற்று லாபமடைந்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு மழையால் பாதித்த பயிர்களுக்கு உரிய கணக்கு இன்றி காப்பீடு கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருவதாக கூறுகின்றனர்.
இந்நிலையில் வெளிமாநில, மாவட்ட நெல் மூட்டகளை கொள்முதல் செய்யக்கூடாது என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இன்று வெளி மாவட்டத்தில் இருந்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக வியாபாரிகள் நெல்லை எடுத்து வருவதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சண்முகநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் வாணிப கழக அதிகாரிகள் சீர்காழி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
அப்போது கடலூரில் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை வாங்கி, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த அகணி கிராமத்தில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய வந்த லாரி மற்றும் 2 டிராக்டர்களில் 8 டன் நெல் மூட்டைகளை சீர்காழி தாடாளன்கோவில் அரவைமில்லில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதனையடுத்து வாகனங்களுடன் நெல்லை சீர்காழி குடிமை பொருள் தனி வட்டாட்சியர் இளங்கோவன் பறிமுதல் செய்து வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் வெளிமாநில, மாவட்டத்தின் நெல்களை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் குறைந்த விலைக்கு பெற்று இங்குள்ள அனைத்து அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் அரசு அதிகாரிகளின் உதவியுடன் விற்பனை செய்து வருவதாகவும், இதனை முழுமையாக கண்காணிக்க அரசு தனிப்படை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும், இல்லையெனில் தொடர்ந்து அரசு அதிகாரிகள் கையூட்டு பெற்றுக்கொண்டு வெளி மாநில மாவட்ட நெல்லை கொள்முதல் செய்வது தொடர்கதையாக இருந்து வரும் எனவும் தெரிவித்து உள்ளனர்.