ஆரணி அருகே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஆசிரியர் ராஜா நீதிமன்றத்தில் சரணைடைந்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா(32). இவர் ஆசிரியர் பட்ட படிப்பு முடித்து விட்டு வேலை இல்லாமல் அரசு தேர்வுக்கு தயாராகி வந்தார். தற்காலிகமாக ஆரணியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில்  கடந்த 2016ம் ஆண்டு சேர்ந்து பணியாற்றி வந்தார். அங்கு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில ஆசிரியராக பாடம் நடத்தி வந்துள்ளார். அப்போது, அதே தனியார் பள்ளியில் ஆரணி டவுன் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். 

 

இந்நிலையில் ஆசிரியர் ராஜாவுக்கும், அதே பள்ளியில் படிக்கும்  8ம் வகுப்பு மாணவிக்கும்  இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் ஆசிரியர் ராஜா குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசுப் பணியில் சேர்ந்தார்.  4 ஆண்டுகாலமாக திருவாரூர் மாவட்டத்தில் அரசு ஊழியராக பணியாற்றி வருகின்றார். இருப்பினும் ஆரணியில் பள்ளி மாணவியிடையே ஏற்பட்ட நட்பு தொடர்ந்து வந்தது. 

 



கடந்த 16ஆம் தேதி ஆசிரியர் ராஜா மாணவியிடம் தொடர்பில் இருப்பது மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதை அறிந்து அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் முன்னாள் ஆசிரியர் ராஜா மீது திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இது குறித்து உரிய விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி ஆரணி அணைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் பள்ளியிலிருந்து சென்ற பின்பும் மாணவியுடன் ராஜா தொடர்பில் இருந்ததும் அவரோடு போனில் பேசி வந்ததும் தெரிய வந்தது. விடுமுறைக்கு ஊருக்கு வரும் ராஜா மாணவியை அழைத்து அவரோடு தனிமையில் பேசுவதும் தேவையற்ற அத்துமீறலில் ஈடுபட்டதும் காவல்துறைக்கு தெரிய வந்தது. மாணவியிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு அவரது வாக்குமூலத்தையும் பெற்றனர். 

 

இதையடுத்து ராஜா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் ராஜாவை கைது செய்ய தேடிய போது அவர் தலைமறைவானது தெரியவந்தது. இந்நிலையில் வேலூர் ஜேஎம் 1மாஜிஸ்திரேட் முகிலாம்பிக்கை முன்னிலையில் ஆசிரியர் ராஜா சரண் அடைந்தார்.  சரணடைந்த ராஜாவை நாளை (25ம் தேதி) வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு தொடர்பாக மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்.