பள்ளி சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி பள்ளி நிர்வாகியும் தன்னைத் தானே கடவுள் என கூறி கொள்ளும் சிவசங்கர் பாபா டேராடூனுக்கு தப்பி சென்றதாக கூறப்பட்ட நிலையில் டெல்லி காசியாபாத்தில் தமிழ்நாடு காவல் துறையினர் பாபாவை கைது செய்தனர். பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சிவசங்கர் பாபாவிற்கு ஆதரவாக சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் சுஷில்ஹரி பள்ளி நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய சுஷில்ஹரி பள்ளி ஆசிரியை காயத்திரி, சிவசங்கர் பாபாவின் சுஷில்ஹரி பள்ளிக்கு வந்த அதிகாரிகளுக்கு தேவையான விளக்கங்களை நாங்கள் கொடுத்துள்ளோம்.


சிவசங்கர் பாபா தப்பி சென்றதாகவும், போலீசார் விரட்டி பிடித்ததாகவும் தவறான தகவல்கள் பரவி வருகிறது ஆனால் சிவசங்கர் பாபா டேராடூனில் இருப்பது அனைவருக்குமே தெரியும் என சுஷில்ஹரி பள்ளி ஆசிரியை காயத்திரி கூறினார். இந்த விவகாரத்தில் சிவசங்கர் பாபா மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் உண்மை நிலவரங்கள் வெளிவரும் எனவும் கூறிய ஆசிரியை காயத்திரி, சிவசங்கர் பாபா தொடபாக பரப்பப்படும் வதந்திகள் நிறுத்தப்படவேண்டும் எனவும் வதந்திகளால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்



பாலியல் குற்றச்சாட்டு குறித்து நேற்று எங்களிடம் விசாரணை நடத்தினார்கள் எனவும், எங்களிடம் அதிகாரிகள் கேட்ட விளக்கங்களை அளித்துள்ளோம் எனவும் பாபா இருக்கும் இடத்தை சொன்னதே நாங்கள்தான் அவர் ஓடி ஒளியவில்லை எனக்கூறிய காயத்திரி பாபா தப்பி ஓடியதாக கூறப்படும் தகவல் முற்றிலும் தவறானது என கூறியுள்ளார். சிவசங்கர் பாபாவால் 2001-ஆம் ஆண்டு நல்ல நோக்கத்திற்காக தொடங்கப்பட்டது சுஷில்ஹரி பள்ளி
குழந்தைகளுக்கு பாதுகாப்பான பள்ளி எனவும் கூறிய காயத்திரி, பெற்றோர்கள் பள்ளிக்குள் அனுமதியில்லை என்பது தவறான தகவல் என கூறியுள்ளார். 


பள்ளிக்குள் பெற்றோர்கள் வருவது வழக்கமான ஒன்று தான் என விளக்கமளித்துள்ள அவர், குழந்தைககளை பாபா தொடுவார் ஆனால் அது நல்ல தொடுதல்தான் என கூறிய ஆசிரியை காயத்திரி, பாபா குழந்தைகளை தொடுவார், கட்டிப்பிடிப்பார், ஆனால் அது பெற்றோர்கள் முன்னிலையில்தான் இது நடக்கும் என விளக்கம் அளித்துள்ளார்.