தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை, ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக, அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய முபாரக் போக்சோ சட்டத்தில் கைதாகியுள்ளார்

 

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் எட்டாம் வகுப்பு சிறுமி கடந்த வியாழன் கிழமை, பள்ளி செல்லும் வழியில், பேருந்து ஓட்டுநரிடம், தந்தை இருப்பதாக கூறி, பாதி வழியிலேயே இறங்கியுள்ளார். தொடர்ந்து மாலை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளிக்கு சென்ற மகளை  காணவில்லை என மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை செய்தபோது, அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய முபாரக் என்பவரும் வியாழக் கிழமையிலிருந்து பள்ளிக்கு வரவில்லை என தெரியவந்தது.

 

இதனை தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், ஆசிரியர் முபாரக் சிறுமியை இருசக்கர வாகனத்தில், சேலம் சாலையில் சென்றதாக தெரியவந்தது. இதனையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி அருகே சேலம் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை மொரப்பூர் காவல் துறையினர் ஆய்வு செய்தனர். 



 

அப்பொழுது சிறுமியை ஆசிரியர் முபாரக் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றது தெரியவந்தது. தொடர்ந்து  காவல் துறையினர் தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு சேலம் மாவட்டம் அயோத்திப்பட்டிணத்தில் காவல் துறையினரின் வாகன சோதனை செய்துள்ளனர். அப்பொழுது முபாரக் சிறுமியை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். தொடர்ந்து காவல் துறையினர் நிறுத்தி விசாரணை செய்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் தீவிரமாக விசாரணை செய்தபோது, பள்ளியில் படிக்கும் மாணவியை, ஆசிரியர் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. 

 



பின்னர் சேலம் மாவட்ட காவல் துறையினர்  மொரப்பூர் காவல் நிலையத்தில் சிறுமியையும், ஆசிரியர் முபாரக்கையும் ஒப்படைத்தனர். இதனையடுத்து காவல் துறையினர் இருவரையும் விசாரணை செய்த, காவல் துறையினர், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து 8-ம் வகுப்பு படிக்கு சிறுமியை ஆசை வார்த்தை கூறி, கடத்தி சென்ற ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் மொரப்பூர் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த தனியார் பள்ளி ஆசிரியர் முபாரக்குக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனியார் பள்ளியில் படித்த சிறுமியை, பள்ளியில் பணியாற்றிய ஆங்கில ஆசிரியரே கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.