Namakkal Crime: நாமக்கல்லில் 12ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.


+2 மாணவி உயிரிழப்பு


இளம் வயதில் குறிப்பாக பதின் பருவத்தில் மாணவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என, வீட்டில் பெற்றோரும் கல்வி நிலையங்களில் ஆசிரியர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும், அதனை பொருட்படுத்தாத பல மாணவர்கள் தவறான பாதையில் பயணித்து வாழ்க்கையையே தொலைத்து விடுகின்றனர். அந்த வகையில் தான், 12ம் வகுப்பு மாணவி நாமக்கல்லில் உயிரிழந்த சம்பவம் பெற்றோரை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆசை ஆசையால் வளர்த்த மகள் உயிரிழந்ததை கண்டு, பெற்றோர் கதறி அழுதது காண்போரை மனமுடைய செய்துள்ளது. 


+2 மாணவி காதல் விவகாரம்:


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பருத்திப்பள்ளியை சேர்ந்தவர் ஒரு கட்டிட தொழிலாளி. இவர் தனது மனைவி, 2 மகன்கள் மற்றும் 17 வயதுடைய மகளுடன் வசித்து வந்தார். மகள் மல்லசமுத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். ஆனால், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பிலிருந்து பள்ளிக்கு செல்வதை அந்த சிறுமி நிறுத்தியுள்ளார். வீட்டிலேயே இருந்த அந்த சிறுமிக்கும், புதுச்சத்திரம் நவனி பகுதியை சேர்ந்த செல்போன் கடையில் வேலை பார்த்து வந்த செந்தில் என்பவரின் மகன் அரவிந்திற்கும் (வயது 23) இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாகவும் மாறியுள்ளது.


கருக்கலைப்பு மருந்தை உட்கொண்ட சிறுமி:


இருவரும் நெருங்கிப் பழகியதில்,  அந்த மாணவி கருவுற்று இருக்குகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி செய்வதறியாமல், வீட்டிற்கு தெரியாமல் கருவை கலைக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி,  கருவை கலைக்க மருந்துக்கடையில் மருந்து வாங்கி உட்கொண்டு இருக்கிறார். இதனால் சிறுமிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. அதைக் கண்ட அவரது குடும்பத்தினர் உடனடியாக மாணவியை சிகிச்சைக்காக மல்லசமுத்திரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


காதலன் கைது:


 மருத்துவமனையில் சிறுமியின் நிலை தொடர்ந்து மோசமடைந்ததால், அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் எவ்வளவு முயன்றும், அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த எலச்சிபாளையம் போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். பின்னர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, மாணவி உயிரிழப்பு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து மாணவியின் காதலன் அரவிந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.